அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்தற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என இலங்கை அணுசக்தி சபை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்தது.
இலங்கை அணுசத்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது.
ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழிநுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கொரியா உள்ளிட்ட நாடுகளில் இத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு பாரியளவு கேள்வி உள்ளதாகவும், இலங்கையில் இத்துறையில் முறையான அங்கீகாரத்துடன் பயிற்சிபெற்ற நிபுணர்களை உருவாக்குவதற்கு உரிய பொறிமுறையொன்றின் அவசியம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தத் துறை சார்ந்த ஏற்கனவே தொழில் அனுவபம் உள்ளவர்களுக்கும், துறைக்குள் பிரவேசிப்பவர்களுக்கும் பயிற்சி வழங்கி அங்கீகாரம் வழங்கும் முறை சபையின் கீழ் இயங்கும் பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், இந்தப் பயிற்சி தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதால் அதற்கான ஒரு திட்டத்தை தயாரித்து இந்தப் பயிற்சிக்கு அதிகளவில் புதியவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .
இதேவேளை, சவூதி அரேபியாவின் 10 பில்லியன் மரங்களை நடும் திட்டத்துக்கு தேவையான கிருமி நீக்கம் செய்யப்பட்ட தேங்காய் நார் இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. கிருமி நீக்கம் செய்வதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் நாட்டுக்குப் பாரியளவு வெளிநாட்டு செலவாணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட குறிப்பிட்டார். அதற்கமைய, இந்தக் கிருமி நீக்கம் செய்யும் வசதியை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை அணுசக்தி சபைக்கு குழு அறிவுறுத்தியது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நளின் பண்டார ஐயமஹ கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ உதயகாந்த குணாதிலக, கௌரவ எம். உதயகுமார், கௌரவ குமாரசிறி ரத்நாயக்க மற்றும் கௌரவ அகில எல்லாவள ஆகியோர் கலந்துகொண்டனர்.