போலியான வாதங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்கட்சி தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

போலியான வாதங்களை  முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்டசிக்கும் அழைப்பு விடுத்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென தெரியவந்துள்ளதால் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அவசியம் எனில் பாராளுமன்ற சபாநாயகரிடத்தில் கலந்துரையாடி எதிர்கட்சியினருக்கு மேலதிக பொறுப்புக்களைப் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்க்கைக்கு 32 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று (03) ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அமரவிரு அபிமன் 32” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது “அமரவிரு அபிமன் 32” நினைவுச் சின்னமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கான அன்பளிப்புக்களும், புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தப் பரீட்சைகளில் சிறப்புச் சித்திப் பெற்ற மாணவர்களுக்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறந்த விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்குமான அன்பளிப்புக்களும் இந்நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹம்பாந்தோட்டை மக்கள் சார்பாக நினைவுச் சின்னமொன்றை அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதிக்கு வழங்கிவைத்த அதேநேரம் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதியினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“தனது 32 வருட அரசியல் வாழ்வில் 28 வருடங்களை பாராளுமன்ற அங்கத்துவத்துடன் கழித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, மக்களுக்கு சிறப்பான சேவைகள் பலவற்றை செய்துள்ளார். இவர் ஆளும் மற்றும் எதிர்கட்சி அரசியல் களம் தொடர்பிலான அனுபவங்கள் நிறைந்தவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தியிருந்தேன். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2022 ஆம் ஆண்டில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்திருந்தால் இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அந்தச் சந்திப்பை புறக்கணித்திருந்தன.

நானும், ஆர்.சம்பந்தனும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம்.

எவ்வாறாயினும் மே 09 நிகழ்வின் பின்னர் நாம் அனைவரையும் ஒன்றிணைக்க முற்பட்டோம். பிரதமர் பதவியைப் பொறுப்பேற்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி எங்களுடைய வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ளும் என எதிர்பார்த்த போதும் அது நடக்கவில்லை. அதன் பின்பே தற்போதைய ஆளும் தரப்பை கட்டமைத்து எமது பணிகளை ஆரம்பித்தோம்.

நான் ஜனாதிபதியாகவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பொறுப்பேற்றுக்கொண்ட அரசாங்கத்தின் விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டார். விவசாயம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் முடங்கிக் கிடந்த காலத்திலேயே அவர் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

2023 ஆம் ஆண்டு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நல்லதொரு விளைச்சலை பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். உணவுப் பாதுகாப்பிற்கான குழுவொன்றையும் நிறுவினோம். ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். எதிர்கட்சியினர் முன்வரவில்லை. இறுதியாக தன்னிறைவான விளைச்சல் கிடைத்த பின்னர் அதிகாரிகள் மக்களுக்கு அரிசியை பகிர்ந்தளித்தனர். அந்த நேரத்தில் தங்களால் பங்களிப்புச் செய்ய முடியாமல் போனமைக்காக எதிர்கட்சி உறுப்பினர்கள் வருத்தமடைந்தனர்.

மேற்படி பணிக்கு அர்பணிப்புடன் பங்களிப்பை வழங்கிய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் அவரின் கீழான அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை விரைந்து பெற்றுக்கொடுக்கும் இயலுமை எமக்கு கிட்டியது. அன்று நாம் நாட்டிற்கு வருகின்ற உரம், கப்பலில் இருந்து நேரடியாக விளைச்சல் நிலத்தை வந்தடையுமென உறுதி கூறினோம். உரம் கிடைத்தவுடன் அவற்றை விவசாயிகளுக்கு வழங்கினோம். அதனால் உணவு பாதுகாப்பினையும் ஏற்படுத்திவிட்டு வறிய மக்களுக்கு சலுகை வழங்கவும் எம்மால் முடிந்தது.

தற்போது நாம் விவசாயத்தை முன்னேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற அதேநேரம், ஏற்றுமதியை மையப்படுத்திய விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். இதுவரையில் நாம் நமக்கு அவசியமான உணவு உற்பத்தியினை மாத்திரமே மேற்கொண்டிருந்தோம். எதிர்வரும் நாட்களில் உலகத்தின் உணவுத் தேவைக்கு அவசியமான உற்பத்திகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் என்ற பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதேபோல் கால்நடை வளங்களை மேம்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டின் சிறந்த கால்நடை வள நிறுவனமான அம்பேவல நிறுவனம் ரிதீகமவில் தங்களுக்கான பண்ணையொன்றை பெற்றுத்தருமாறு கோரியுள்ளது. அப்பகுதியில் கால்நடை வளங்களை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் பிரதான நிறுவனங்களில் ஒன்றான “அமுல்” நிறுவனம் கால்நடை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மேலும் சில நிறுவனங்களும் அதற்காக முன்வந்துள்ளன. வெளிநாடுகளிலிருந்து கால்நடை இறக்குமதி செய்யும் எண்ணம் எமக்கு இல்லை. அவ்வாறு கொண்டு வரப்பட்ட 25,000 கால்நடைகள் இறந்துவிட்டன. அதனால் மேற்படி பகுதிகளை அபிவிருத்திச் செய்யும் பணிகளை அந்த நிறுவனங்களிடத்திலேயே ஒப்படைக்கவுள்ளோம். அதனால் பால் உற்பத்துறை உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த முடியும்.

அதேபோல் முட்டை மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படும். அதனை எம்மால் தனியாகச் செய்ய முடியாது. அதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்காகவே இவற்றை செய்கிறோம். நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த செப்டெம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான நிறைவேற்றுக்குழு மட்டத்திலான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டோம். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு 2023 இற்கான வரவுச் செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம்.

அந்த நேரத்தில் வரிகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை உருவானது. அப்போதும் எதிர்கட்சிகளை எம்மோடு ஒன்றுபட்டு பயணிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்த போது அவர்கள் “அரசாங்கம் பொய் சொல்கிறது. கைசாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எவையும் இல்லை. இந்த பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யப் போகிறார்கள்” என்று பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இருப்பினும் அதன் பின்னரான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாம் முன்னெடுக்கவிருந்த வேலைத்திட்டங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக தடையேற்படுத்த முயற்சித்த போதிலும் நாம் அச்சமின்றி முன்னோக்கிச் சென்றோம்.

இறுதியாக ஏப்ரல் மாத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. அதற்கான முதன்மை நியதியாக பெரிஸ் சமவாயம் , இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அப்போது சீனா அதனை ஏற்றுக்கொள்ளாது என எதிர்கட்சி கூறியது. ஆனால் மார்ச் மாதத்தில் சீனாவும் தனது இணக்கப்பாட்டினை தெரிவித்தது.

பின்னர் இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக உறுதியளித்தோம். அதனை நிறைவேற்றிக்கொள்ள அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரினோம். இறுதியாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சியும் அதனை ஆதரிக்க வேண்டிய நிலைமை வந்தது. அதன் பின்னர் கடன் வழங்குநர்களுடன் ஆலோசிப்பதற்காக மேற்படி ஒப்பந்தத்தை நான் அதிகாரிகளிடத்தில் சமர்பித்தேன்.

அந்த நேரத்தில் எமது மொத்தக்கடன் 83 பில்லியன் டொலர்களாகியுள்ளது என்பதை மத்திய வங்கி ஆளுநர் கூறியிருந்தார். அது எமது மொத்த தேசிய உற்பத்திக்கு நிகரானதாகும். இன்னும் 10 – 15 வருடங்கள் சென்றாலும் அந்த கடனை நிவர்த்திக்கும் இயலுமை எம்மிடம் இல்லை. அதனால் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடத்தில் எமக்கு 17 டொலர் பில்லியன் கடன் நிவாரணம் அவசியப்படுகிறது என்பதை நாம் தெரியப்படுத்தினோம். அந்த நிவாரணத்தை பெற்றுத்தர முடியாவிடின் மீள் செலுத்துகை காலத்தை நீடித்தல், வட்டியை குறைத்தல் ஆகிய விடயங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள் என கோரியிருந்தோம்.

அப்போது வெளிநாட்டு கடன்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றாலும் உள்நாட்டு கடன் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர். உள்நாட்டு கடனை குறைக்காவிட்டாலும் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்த பணம் இருக்கவில்லை. உள்நாட்டு பணத்தின் ஊடாகவே நாம் டொலர்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்த காரணத்தினால் உள்நாட்டு கடனையும் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அதன் பின்னர் இந்நாட்டின் வங்கிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் மீது கைவைக்காமல் மேற்படி நகர்வை முன்னெடுக்குமாறு எனது ஆலோசகருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் அறிவுறுத்தினேன். அதன் பலனாகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. அது அரசியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல. மாறாக அரச நிதிக்குழுவிற்கு அதிகாரிகளை அழைத்து கோரிய விடயமாகும். அதிகாரிகளும் அந்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்தனர். இருப்பினும் அந்த ஆரதவு பாராளுமன்றத்தில் கிடைக்கவில்லை. 62 பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.

முதலாவதாக ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்க வேண்டாம் என்கிறார்கள். நாம் அதன் மீது கைவைக்கவில்லை. மேலும் நான் ஜனாதிபதியாவதற்கு முன்பாகதே அதற்கான வட்டி வீதம் 10%-9% ஆக குறைவடைந்திருந்தது. நாட்டில் காணப்பட்ட நிலைமையில் 10% சதவீத வட்டியை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்பட்டது. எதிர்கட்சிகள் அன்று மேற்படி விடயங்களுக்கு எதிரப்பு தெரிவித்திருக்கவில்லை.
அதேபோல் குறைந்தபட்சம் 9% சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சரவையே தீர்மானித்திருந்தது. நல்லதொரு மேம்பாடு வருகின்ற போது 10% சதவீத வட்டியை நாம் அறிவிப்போம். ஊழியர் சேமலாபத்தில் நாம் கைவைக்கவில்லை என்பதோடு 9% வட்டி என்பது சட்டத்தின் ஊடாகவே உறுதிப்பட்டுள்ளது.

அடுத்தாக 24% சதவீத வட்டி அறவிடப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால் அந்த வட்டி எதிர்வரும் நாட்களில் குறைவடையும். பணவீக்கம் 9% இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் வட்டி வீதம் 12% – 13% ஆகவே காணப்பட்டது. இந்த நேரத்தில் வரி விதிக்க வேண்டிய விதம் பற்றி எதிர்கட்சி கூறுமெனில் அதுபற்றி அமைச்சரவையில் ஆலோசிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

மூன்றாவதாக வங்கிகளுக்கு வரி அதிகரிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் எம்மால் வங்கிகளிடத்தில் அதிகளவில் வரியை அறவிட முடியும். ஆனால் அப்போதைய வட்டி வீதம் 12% காணப்பட்டாலும் 13%- 14% வரையான வட்டியை அறவிட வேண்டிய நிலைமைக்கு வங்கிகள் தள்ளப்படும். அவ்வாறு வட்டியை அதிகரிக்க இடமளிக்க முடியாது என்பதால் மேற்படி மூன்று யோசனைகளையும் நான் நிராகரித்துவிட்டடேன்.

எனவே தொடர்ச்சியாக போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு மாறாக அரசாங்கத்தினால் நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான முழு எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு ஒன்றுபடும் பட்சத்தில் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமிதத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.

ஆளும் தரப்பில் இருந்தாலும் எதிர் தரப்பில் இருந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாட்டு மக்களுக்குச் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம். அதனை விடுத்து போலியான தர்க்கங்களை முன்வைப்பதால் பயனில்லை. அந்த முயற்சியில் எதிர்க்கட்சி பல தடவைகள் தோற்றுப்போயுள்ளது.

சபாநாயகருடன் கலந்துரையாடி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் பல பொறுப்பக்களை கையளிக்க நான் தயாராகவே உள்ளேன். தற்போதும் அவர்கள் செயற்குழுக்களில் அங்கத்துவம் வகிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வரவுச் செலவுத்திட்ட அலுவலகம் திறக்கப்படவுள்ளதால் மேலும் பல பொறுப்புக்கள் உருவாகும். அதனால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கு பாதிப்பு ஏற்பட நாம் இடமளியோம்.” என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

எவரும் நாட்டை பொறுப்பேற்காமல் இருந்த சவாலான சூழலில் தற்போதைய ஜனாதிபதியே நாட்மை பொறுப்பேற்க முன்வந்தார். வரிசைகளில் மக்கள் உயிரை விட்டனர், உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எவராலும் நாட்டை மீட்க முடியாதென பலரும் கூறினர்.

இருப்பினும் நாட்டிற்காக அந்த சவாலை பொறுப்பேற்றத் தலைவருக்கு அதனை வெற்றிகொள்ள அனைவரும் உதவ வேண்டும். அந்த நோக்கிலேயே விவசாய அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்டேன். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான வேலைத்திட்டங்கள் விளைச்சல் நிலங்களிலிருந்து விலகிச் சென்ற விவசாயிகளை மீளவும் விவசாய நிலங்களை நோக்கி வரச் செய்துள்ளது.

மக்களுக்கு உரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த போகத்தின் போது மூன்று வகை உரங்களும் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கப்படும். அதனால் அனைத்து பகுதிகளிலும் பெருமளவிலான விளைச்சளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விவசாய நவீன மயப்படுத்தலுக்கு அவசியமான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனால் குறுகிய காலத்தில் நாட்டின் விவசாயத்துறை புத்துயிர் பெறும்.
சில காலங்களுக்கு முன்பு மக்கள் பாராளுமன்றத்தின் 225 பேரையும் புறக்கணித்தனர். எம்.பிக்கள் வீதிகளில் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. இன்று பலருக்கும் அந்த நிலைமை மறந்துபோயுள்ளது. அவ்வாறான நிலைமை மீண்டும் நாட்டிற்குள் உருவாகாமல் இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவர முடியும் என காண்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தானே நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் , கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ஹம்பாந்தோட்டை மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்க்கைக்கு 31 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

நாட்டையும் நாட்டு மக்களையும் நினைத்தே நாம் அனைவரும் தற்போதைய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். அந்த நேரத்தில் விவசாய துறை தொடர்பிலான விடயம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது. அராஜக செயற்பாடுகளிலிருந்து நாட்டை மீட்டெக்க நாம் ஒத்துழைப்பு வழங்கினோம். அதனால் எமது கட்சியின் உறுப்புரிமைகளையும் இழந்தோம். அந்த நேரத்திலும் மஹிந்த அமரவீர முன்னோடியாகச் செயற்பட்டார். அவரின் காலோசிதமான தீர்மானங்களுக்கு உரிய பலன் கிட்டியுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தென் மாகாண அளுநர் விலீ கமகே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் ஹம்பாந்தோடையின் பெருந்திரளான மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன