புலம்பெயர் தொழிலார்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க நிவாரண சலுகை (Duty Free) தொகை , எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரிக்கப்பட்ட சுங்க வரிச்சலுகை நிவாரண தொகையை பெற தகுதியுடையவர்கள். கடந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதியில் இருந்து வங்கி முறை மூலம் நாட்டுக்க அனுப்பப்பட்ட பணத்தின் தொகையை மாத்திரம் கவனத்தில்கொள்ளப்படுவதுடன் ஜந்து பிரிவுகளின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படும்.
2ஆயிரத்து 400 அமெரிக்க டோலர் தொடக்கம் 4 ஆயிரத்து 799 டோலருக்கும் இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 600 அமெரிக்க டோலர்களும் ,4ஆயிரத்து800 டோலர் முதல் 7ஆயிரத்து 199 டோலர்களை அனுப்பி தொழிலாளர்களுக்கு 960 டோலர்களும் ,7ஆயிரத்து200 டோலர்கள் தொடக்கம் 11 ஆயிரத்து 999 டோலருக்கும் இடைப்பட்ட தொகையை அனுப்பிவர்களுக்கு ஆயிரத்து 440 டோலர் மேலதிக சுங்கவரி நிவாரணம் வழங்கப்படும்.
12 ஆயிரம் தொடக்கம் 23ஆயிரத்து 999க்கும் மேற்பட்ட டோலர்களை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 2ஆயிரத்து 400 டோலர் நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடியும். 24ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட டோலர்களை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 4 ஆயிரத்து 800 டோலருக்கான மேலதி சுங்கவரி தொகைகையை பெற்றுக்கொள் முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
தொழிலாளர்களை வெளிநாட்டு தொழில் ஈடுபடுத்துவது போன்று , அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையான வழியில் நாட்டுக்கு கொண்டு வருவதும் அவசியம். அதற்காக நாம் கடந்த காலங்களில் செயல்பட்டோம்.
புலம்பெயர் தொழிலார்கள் நாட்டுக்கு அனுப்பிய பணத்தின் தொகை, 190 மில்லியன் டோலர்களாக வீழ்ச்சியடைந்த நேரத்தில், சிலர் பணத்தை அனுப்பவேண்டாம் என பல நாடுகளுக்கு சென்று தெரிவித்தனர். சட்ட விதிகளுக்கு மாறாக உண்டியல் ஊடாக சிலர் பணம் அனுப்பி லாபம் சம்பாதிக்க முயற்சிக்கும் போது, நாட்டு மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சரியான வழியை பின்பற்றி ,நாட்டிற்கு பணம் அனுப்ப ஆரம்பித்தனர். பாதுகாப்பான வழிகள் மூலம் நாட்டுக்கு பணம் கொண்டு வர பல திட்டங்களை நாம் முன்னெடுத்தோம்.
அதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இறக்குமதி அனுமதி சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. புலம்பெயர் தொழிலார்களுக்கு சுங்க வரிச் சலுகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
அத்துடன், கடந்த வாரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்கள் இரண்டு மில்லியன் ரூபா வரை கடன் வசதிகளைப் பெற முடியும். அத்துடன், ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவையில் தனது ஆலோசனைகளை முன்வைத்ததுடன், வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பிய தொழிலாளர்களுக்கு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சரவைக்கு அறிவித்தார்.
ஒரு காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் ஹீரோக்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் கொரோனா காலத்தில், அவர்கள் மனித வெடிகுண்டுகளாக கருதப்பட்டனர். இலங்கைக்கு வந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று அவர்களை ஒடுக்கினார்கள். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதால், அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர் மற்றும் மனவேதனை அடைந்தனர். இதையெல்லாம் வைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய அரசாங்கத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கை கிடைத்தது. இந்த நம்பிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புகள் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணியை சட்ட விதிகளின் கீழ் இந்நாட்டுக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதற்காக ,இவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும் போது விமான நிலையத்தில் சுங்க வரி கடைத்தொகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்காக ,வெளிநாடுகளில் இருந்த காலத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்படும் சுங்க வரிச் சலுகை தொகைக்கு மேலதிகமாக அவர்களுக்கு ,அவர்களால் அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அடிப்படையில் சுங்க வரிச்சலுகையை வழங்குவதற்கு கடந்த 2022.08.08 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கடந்த 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..