நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன

அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.

பணப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் தவிர, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒத்துழைப்போ அல்லது ஒப்பந்தமோ இல்லாமை சில திட்டங்கள் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட திட்டங்களைப் பரிசீலித்து அவற்றை மீளவும் ஆரம்பிப்பதற்கான உத்திகள் அல்லது பின்பற்றக் கூடிய நடைமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 20ஆம் திகதி கூடியிருந்தது.

இதற்கமைய தற்பொழுது நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களுக்காக 56,388 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நாகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2,531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும், 1423 மில்லியன் ரூபாவுக்கான கொடுப்பனவுகள் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்ய மேலும் 56,999 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் இங்கு புலப்பட்டது.

இந்தத் திட்டங்களில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் போல பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் தீர்க்கமுடியாத காரணங்களால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அடங்கும். நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளடங்கலாக, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்டவை இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.

நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகளால் தடைப்பட்ட 11 திட்டங்களில், கொட்டாவ முதல் மாஹேனவத்தை வரையிலான புதிய நுழைவு வீதி நிர்மாணம், அலவ்வ நகர அபிவிருத்தி (சாலைகளை விரிவுபடுத்துதல்), கம்பஹா நெடுஞ்சாலையில் இருந்து யக்கல வரையிலான நுழைவாயில் நிர்மாணம், இம்மதுவ நகர விரிவாக்கம், பேருவானாவத்தை, எஹெலியகொடவில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான வீடுகளை அமைக்கும் திட்டம், ஹட்டன் புகையிரத அபிவிருத்தி மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையை மறுசீரமைப்பது போன்ற திட்டங்கள் குறித்து குழு பரிசீலனை செய்தது.

கொட்டாவ முதல் மாஹேனவத்தை வரையிலான புதிய நுழைவு வீதியின் நிர்மாணப் பணிகள் சுமார் 98% நிறைவடைந்துள்ளதாகவும், காணிகளை இழக்கும் மக்களுக்காக வேறொரு இடம் முன்மொழியப்பட்டுள்ளதால் காணி சுவீகரிப்பு பிரச்சினை பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளது என்றும், ஹோமாகம பிரதேச செயலாளரிடம் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்த பின்னர், திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழு முன் தெரிவித்தனர்.

எஹலியகொட நகரத்தின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தின் ஊடாகச் செல்வதற்குப் பதிலாக உள்ளக வீதிகளை அமைப்பதால் காணிகளை இழக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக திட்டமிடப்பட்ட பேருவானவத்தை, எஹலியகொட குறைந்த வருமானம் பெறுவோருக்கு 34 வீடுகளை அமைக்கும் செயற்பாடுகள், அந்த வீடுகளுக்கான மின்சாரம், குடிநீர் விநியோகம் என்பவற்றைப் பெறுவதில் காணப்படும் பிரச்சினைகளால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், காணியின் உரிமை தொடர்பில் புகையிரதத் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் காணப்படும் பிரச்சினை, மின்சார சபை மற்றும் இரத்தினபுரி மாவட்ட சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வசதிகளை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் காணி உரிமை தொடர்பில் புகையிரதத் திணைக்களம் மற்றும் வீதி அபிவித்தி அதிகாரசபை என்பவற்றுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், உத்தேச கம்பஹா மாகவிட நெலும்வில உடல் ஆரோக்கிய நடைபாதைத் திட்டத்தின் காணி சுவீகரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், அத்திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குழு முன்னிலையில் தெரியவந்தது. இதற்காக 13 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதால், இந்தக் காணிகளில் நகர்ப்புற காடு வளர்ப்பை மேற்கொண்டு, இலங்கையில் வனவளத்தை அதிகரிக்கும் செயல்பாட்டை மேற்கொளுமாறு குழு அறிவுறுத்தியது.

வெலிக்கடை சிறைச்சாலையைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் தற்பொழுது வெலிக்கடையில் உள்ள காணியின் பெறுமதி அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு இக்காணி குத்தகைக்கு அல்லது விலைமனுக்கோரலின் மூலம் இதனை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் ஹொரணையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் சிறைச்சாலையை இடவசதியுடன் கூடியவாறு கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அரசு பணத்தை செலவழிக்காமல், பெறப்படும் முதலீட்டின் மூலம் செலவை ஈடுகட்ட முடியும் என குழு வலியுறுத்தியது. மேலும், வெலிக்கடை சிறைச்சாலையை மாற்றியமைப்பதன் மூலம், அதிக பெறுமதிமிக்க வெலிக்கடை காணியை வேறு உற்பத்தி முதலீட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தவும், இதன் மூலம் பெறும் தொகையில் அதிக வசதிகளுடன் சிறைச்சாலையை மீள அமைக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குழு வலியுறுத்தியது.

நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பு அல்லது உடன்பாடு இல்லாததே திட்டங்கள் நிறுத்தப்படுவதற்கு முக்கியக் காரணம் என்று குழு சுட்டிக்காட்டியது. மேலும், குறைந்த வளத்தில் திட்டங்களைத் தொடங்கும்போது, ​​சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முதற்கட்ட ஆய்வு செய்து, மிகவும் பயனுள்ள மற்றும் மிக முக்கியமான வழிமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. குழு வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், குழுவில் ஆராயப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

இதில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ துஷார இந்துனில் அமரசேன, கௌரவ அகில எல்லாவல, கௌரவ வருண லியனகே, கௌரவ திலக் ராஜபக்ஷ மற்றும் கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன