தற்போதைய தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் பெருந்தோட்டப் பகுதியில் மூன்று தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாப்பை உறுதி செய்யும் நடை முறையில்லை. இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட தொழில் சட்டங்களே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொழிலுக்காக காத்திருப்போரின் நலன் கருதி காப்புறுதி திட்டத்திற்காக தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் ,இதேபோன்றே கல்வி கற்ற பெண்களில் பெரும்பாலானோர் குழந்தை பெற்ற பின்னர் தொழிலை கைவிட்டு குழந்தை தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தும் நிலை தற்போது காணப்படுகிறது. ஆனால் அவர்கள் கற்ற கல்வியினால் நாட்டுக்கோ அல்லது அவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனை கருத்திற்கொண்டு பெண்கள் வீடுகளில் இருந்தவாறே தொழில் செய்யக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்த்தை முன்னெடுக்கவும் ,தொழில் புரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரசவகால விடுமுறையைப் போன்று ஆண்களுக்கும் இந்த விடுமுறையை வழங்குவதற்கான சட்ட திருத்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலாக கல்வி கற்கும் போதே பகுதிநேர தொழிலில் ஈடுபடுவதற்கான வசதிகள் சட்ட ரீதியில் மாணவர்களுக்கு இல்லை இதற்கு வசதி செய்யும் வகையில தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்பார்க்க பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் ,தொழில் துறைகளை சார்ந்தவர்கள் ,பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறியும் ஏழாவது பொது கலந்தாய்வு அமர்வு இன்று (14) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அமைச்ர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நவீன உலக தொழில் துறைக்கு அமைவாக தொழிலாளர்களின் நலன்களை பாதுக்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ள தொழில் சட்ட திருத்தத்திற்கான வரைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாராங்களில் தயாரிக்கப்பட்டுவிடும். இதற்காக தயாரிக்கப்படும் செப்பமற்ற வரைவு (Rough draft) வுடன் அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடி சட்டமூலத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தொழில் சட்டத்தில் திருங்களை மேற்கொள்வது தொடர்பில் தொழில் அமைச்சு மேற்கொண்ட இந்த பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் மற்றும் அலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் அல்லது சர்வதேச நிறுவனங்கள் தற்போதைய தொழில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமகால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த தற்போதைய தொழில் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார். அத்தோடு பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
நவீன உலகிற்கு ஏற்றவகையில் தொழில் சட்டங்கள் மாற்றப்படும்
புதிய கருத்துக்களை முன்னெடுத்து, புதிய தொழில் சட்டத்தை நாம் முன்வைப்போம்
பணியிடங்களில் வேறுபாடான முறையிலான செயல்பாடுகளை தடுக்க நாங்கள் சட்டங்களைக் கொண்டு வருவோம்
சம்பள நிர்ணய ஆணைக்குழு கட்டளைச் சட்டம் மற்றும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டத்தில் ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை நீக்கி அனைவரையும் சமமாக நடத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
பணியிடங்களில் துன்புறுத்தல்களை தடுத்தல் மற்றும் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைவாக ஐந்து நாள் வேலை வாரமும், நெகிழ்வு தன்மையுடனான வேலை நேரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டும்.
பகுதி நேர வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இரவு நேரங்களில் பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டும்.
மகப்பேறு விடுப்பு விடுமுறை தொடர்பில் சட்ட ஏற்பாடுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்
மேலதிக கொடுப்பனவு (O/T) வேலையின் அளவு மற்றும் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து சீரான முறை அறிமுகப்படுத்தப்பட்டும்.
வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
புலம்பெயர் ஊழியர்கள் இலங்கையில் தொழில் புரியும் போது அதனை முறைப்படுத்த சட்ட ஏற்பாடு கொண்டு வரப்படும் . அதை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டம் இயற்றப்படும்.
பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் பயிற்சியாளர்கள் தொடர்பில் சட்ட விதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதற்கான சரியான விளக்கங்கள் வழங்கப்படும்.
தேசிய சம்பள பேரவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் தற்போதைய மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளுக்கு அமைவாக குறைந்தபட்ச ஊதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் ஒழுக்கக்கேடான செயலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கு வேலை வழங்குபவர் பொறுப்புக்கூறும் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
வேலைத்தளங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட விதிகள் வலுப்படுத்தப்படும்.
மோசமான செயல்திறன் மற்றும் வணிக மறுசீரமைப்பின் போது வேலை இழக்கும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் அதை விரைவாகவும் சுலபமாக மாற்றுவதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படும்.
மூலப்பொருட்கள் கிடைக்காமை, இயந்திரங்கள் கிடைக்காமை, கேள்விகள் Orders கிடைக்காமை அல்லது முதலாளியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் குறுகிய அறிவிப்பில் தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்தும் போது ,தொழில் ஆணையரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான சட்ட விதிகள் அறிமுகப்படும்.
ஊழியர்கள் சுயமாக தொழிலை ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதுதொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வேலை வழங்குபவருக்கு அறிவிக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்படும்.
சம்பளத்தில் இருந்து தொழிற்சங்கத்திற்கான உறுப்பினர் கட்டணத்தை அறவிட்டு அனுப்புவதை முதலாளிமாருக்கு கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சமூகப் பாதுகாப்பு நிதி மூலம் மகப்பேறு நலன்கள், ஊழியர்களின் உடல்நலம் மற்றும் வேலையின்மை நிலை ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்கான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு முறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்