ஊழியர்களின் சேமலாப நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சேமலாப நிதிக்கு குறைந்தபட்ச வட்டி  9 சத வீதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும்,  பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு  கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம்  ஊழியர்களின் சேமலாப நிதியத்தியின் மீதான தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ,ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், ஊழியர்களின் சேமலாப  வைப்பு நிதிக்கு குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதனால், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்ச வட்டியாக 9 சதவீதம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த மூன்று வருடங்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்ச வட்டி வீதம் 9 சதவீதமாக  வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். 

இதற்கமைவாக  ஊழியர் சேமலாப சட்டமூலத்தில் திருத்தத்தை கொண்டு வருவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை விரைவாக பெற்று அந்த திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார  மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன