*சுமார் நூறு ஆண்டுகள் பழமையான தொழில் சட்டங்களுக்குப் பதிலாக நவீன தொழில் உலகத்திற்கு ஏற்ற தொழிலாளர் சட்டம்
180 நாட்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரிமை
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்
ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய தொழில் புரியும் வேலை நேரம்
பகுதி நேர வேலைக்கான வாய்ப்புகள்
மகப்பேறு விடுமுறைக்கான வாய்ப்பு
தேசிய சம்பள பேரவை யை அமைக்க ஏற்பாடு
சர்வதேச பன்னாட்டு நடைமுறை மரபுகளை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடு
சுமார் நூறு வருடங்கள் பழமையான தொழிலாளர் சட்டங்களைத் சீரமைத்து , நவீன தொழில் துறை உலகிற்கு ஏற்ற வகையில் தொழில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதன் மூலம் மகப்பேறு விடுப்பு விடுமுறை வழங்கல் ,180 நாட்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கொடுப்பனவுக்கு உரிமை முதலானவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தொழில் சட்ட திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான மாதிரி வரைவுச் சட்ட மூலத்தை தேசிய தொழில் ஆலோசனை பேரவைக்கு (06) சமர்ப்பித்த அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“1935 ஆம் ஆண்டு போன்ற நீண்ட பழமையான காலப்பகுயில் கொண்டு வரப்பட்ட, காலாவதியான தொழில் சட்டங்களை சீரமைத்து புதிய தொழிலாளர் சட்டத்திற்கான வரைவை தேசிய தொழில் ஆலோசனை பேரவையிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கான வாய்ப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.
எதிர்கால தொழில் உலகிற்கு பொருந்தாத, நவீன சமூகப் போக்குகளுக்குப் பொருந்தாத தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் தராத ,காலாவதியான பழமையான தொழிலாளர் சட்ட கட்ட அமைப்பே எம்மிடம் உண்டு. தொழிலாளர் பாதுகாப்பைப் பாதுகாக்க நேரத்தைச் செலவழிக்கும் முறைகளே தற்போது நடைமுறையில் உள்ளன. முதலீட்டாளர்களை நாட்டிற்கு அழைப்பதற்கும் அவர்களுக்கு தேவையான மனித வளங்களை பெற்றுக்கொள்ளுவதிலும் கடினமாக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகளே இருக்கின்றன. அவற்றை சீர்செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்காக தொழில் ஆலோசனை பேரவையின் அனுமதியை பெற்று , அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பை விடுத்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை வெளியிட்டு கருத்துக்களை கேட்டறிவதற்கான செயல்; அமர்வுகள் நடத்தப்பட்டன. பல்வேறு வழிகளில் யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. கலந்துரையாடல்களை முன்னெடுக்க பலர் எங்களுக்கு உதவினார்கள்.
அதன்படி, செப்பமற்ற Rough draft வரைவைத் தயாரித்து, தொழில் ஆலோசனை பேரவையிடம் சமர்ப்பித்தோம். இது குறித்து தொழில் ஆலோசனை பேரவை தனது கருத்தை தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி வரை திருத்தங்களை பெற்றபின், திருத்தங்களுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் , சட்ட வரைவை சட்ட திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதுவரை பின்பற்றப்பட்ட வெளிப்படையான முறையில், நிறைவேற்ற ஏற்பாடு செய்வோம். தொழிற்சங்கங்கள், முதலாளிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றே இந்த வரைவை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த வரைவின் சுருக்கம் முன்வைக்கப்பட்டும்.
தொழிலுக்கான ஆட்சேர்ப்பின் போது பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை இதன் ஊடாக நாங்கள் கொண்டுவருவோம். பணியிடத்தில் அனைத்து வகையான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்படும். பாலியல் வன்முறை தொடர்பான சர்வதேச மாநாட்டின் இலக்கம் C 190 ஐ உறுதிப்படுத்த இது உதவுகிறது. இலக்கம் C 190ஐ அங்கீகரிக்கும் கோரிக்கைகளை இதன் மூலம் நிறைவேற்ற முடியும்.
மேலும், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் சார்ந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் ஊடாக சர்வதேச தொழில் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பான இலக்கம் 155 யின் கீழான ஒப்பந்த விதிகள், உறுதிப்படுத்துவதையும் சாத்தியமாக்க கூடியதாகவுள்ளது.
மேலும், பணிக்கொடை கொடுப்பனவை வழங்குவதற்காக 15 ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற வரம்பு மற்றும் ஐந்தாண்டு தொழில் செய்திருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதை நீக்கிய பின், 180 நாட்கள பணி புரியும் ஊழியருக்கு அரை மாத சம்பளத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற விதி முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வருடம் வேலை செய்தாலும் பணிக்கொடை கொடுப்பனவு கிடைக்கும். ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு தொழிற்சாலை அல்லது தொழில் நிறுவனத்தில் , இரவில் பணிபுரியும் பெண் மட்டுமல்ல, எந்தவொரு ஊழியரும் இரவில் ,மேற்கொள்ளும் ஒவ்வொரு பணி மணித்தியாளத்திற்கும் , ஒன்றரை மணி நேரம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டுளளன. முன்பு பெண்களுக்கு மட்டுமே இதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சம்பள கட்டளைச் சட்டம் , சாப்பு மற்றும் அலுவலகச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பணி நிலைமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான ஏற்பாடுகள் நீக்கப்பட்டு, அதே பொது நிலைமையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட் பணியாளர் தவிர, பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் சேவை விதிமுறைகள் அடங்கிய நியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும். அது கட்டாயமாகும்.
ஊழியர்களின் விருப்பப்படி ஐந்து நாள் வேலை வாரம் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவில் பணிபுரியும் பெண்களுக்கு தற்போதுள்ள சட்ட விதிகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . பெரும்பாலான பெண்களின் கோரிக்கை இதுவாகும் . இந்த கோரிக்கையை பல மகளிர் அமைப்புகள் எமக்கு முன்வைத்தன.
மேலதிக நேர லேலையை கணக்கிடுவதற்கான ஒரு பரிமாண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகுதி நேர வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு. பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பணியமர்த்த சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.. அவை தொடர்ந்து முறையாக ஒழுங்குபடுத்தப்படும்.
இதேபோன்று இது வரை இல்லாத மகப்பேறு விடுமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தால், தந்தை குழந்தையை சந்திக்கும் போது குழந்தை தாய் ஆகியோருடன் தந்தையும் ஒன்றிணைந்து இருப்பதற்காக மூன்று நாள் விடுமுறை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அதற்கான உரிமைகளைப் பாதுகாக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்படும். புலம்பெயர் ஊழியர் ஒருவர் இலங்கையில் பணிபுரியும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். இப்போது இலங்கைக்கு வந்து வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது யார் வேலை செய்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
வீட்டுகளில் வேலை செய்யும் வீட்டு வேலை ஆட்கள் தொழிலாளர்கள் என்பதும் தொழிலாளர் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இது வரை வீட்டுகளில் வேலை செய்பவர்கள் தொழில் சட்டத்தின் கீழ் வரவில்லை. இவர்கள் தொழிலாளர் சட்ட அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம், C189 என்ற சர்வதேச மாநாட்டின் விதியை அங்கீகரிக்க முடிகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் என்று பலர் கூறிய போதும் நாட்டில் தொழில் புரியும் வீட்டுப்பணிப்பெண்கள் மீதான முறைகேடுகள் குறித்து வாய் திறப்பதி ல்லை. நாம் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்காக அவர்களையும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவுள்ளோம்.
.
சம்பள நிர்ணய சபை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் முடிவுகள் மூலம் யாப்பு விதிகளுக்கு அமைவாக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் முறைக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தற்போதைய கால அளவுகோல்களுக்கு அமைவான அடிப்படையில் ஒரு தேசிய சம்பள நிர்ணய பேரவை அறிமுகப்படுத்தப்பட்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் முறைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியர்களின் தவறான நடத்தை தொடர்பான இறுதி ஒழுக்காற்று விசாரணை முடிவுகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முதலாளிகள் வழங்க வேண்டும் என்பதற்கான சட்ட விதிகள் கொண்டு வரப்படும்.
தற்போதைய சட்ட முறையின்படி தொழில் வழங்குபவரின் நியாயமற்ற நடைமுறைகளினால் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படும்; நியாயமற்ற நடைமுறைகளையும் தடுக்க சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்படும். நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் இரு தரப்பினருக்கும் வழக்குத் தொடரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு நிதி மூலம் மகப்பேறு நலன்கள், பணியாளர் ஆரோக்கியம் மற்றும் வேலையின்மை ஏற்பட்டால் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை முதலாளிக்கு மட்டும் இருந்த சுமையை தனி நிதி மூலம் செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதன் மூலம், பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்.
தொழிலாளரின் சம்பளத்தில் தொழிற் சங்க உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்பட்டு தொழிற்சங்கங்களுக்கு அனுப்புவது முதலாளிக்கு கட்டாயமாக்கப்படும். இதுதொடர்பில் ஒரு ஊழியர் இதற்கான கோரிக்கையை வைத்தால், தொழிற் சங்கத்திற்கான சந்தா பணத்தை சம்பளத்தில் வசூலித்து அனுப்பி வைப்பது கட்டாய மாக்கப்படும்
தற்போது, தொழிற்சங்கம் அமைக்க குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாட்டின் மக்கள் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கையை 7ல் இருந்து 100 ஆக உயர்த்துகிறோம். தொழிற்சங்கத்தின் நிர்வாக சபையில் 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படும்.
வேலை நிறுத்தங்களை ஆரம்பிக்கும் முன்னர் தொழில் வழங்குனருக்கு அதுகுறித்து அறிவிப்பது மற்றும் வேலைநிறுத்தத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற ஏற்பாடு செய்யப்படுகிறது. சில வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பணியிட விதிகளை முதலாளிக்கு அறிமுகப்படுத்தவும் அதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
மோசமான செயல்திறன், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மறுசீரமைப்பு அல்லது வணிக மறுசீரமைப்பு காரணமாக பணிநீக்கம் ஏற்பட்டால், இழப்பீடு செலுத்துவதன் மூலம் பணிநீக்கம் செயல்முறையை துரிதமாகவும் எளிதாகவும் செய்யப்படும்.
மூலப்பொருட்கள் கிடைக்காமை. கேள்விகள் இல்லாமை, இயந்திரங்கள் பழுதடைதல் அல்லது முதலாளியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் குறுகிய காலத்திற்கு தொழிலை இடைநிறுத்தல் முதலானவை தொழிலாளர் ஆணையர் நாயகத்தின் அனுமதியுடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊழியர் ஒருவர் சேவையை விட்டு வெளியேறும் போது, அவர் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதுதொடர்பாக முதலாளிக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாராவது சேவையை விட்டு வெளியேறினால், அவர்கள் ஒரு மாத அறிவிப்பை வழங்க வேண்டும்.
ஓய்வூதிய வயது மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு தொழிலுக்கும் கௌரவத்தை உருவாக்க, ஒவ்வொரு தொழிலும் பின்பற்ற வேண்டிய தரநிலைகள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டில் ஒவ்வொரு தொழிலுக்கும் மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இதன் மூலம் பதில் கிடைக்கும்.
ஒரு சமூக பாதுகாப்பு நிதி மூலம் மகப்பேறு நலன்கள், பணியாளர் ஆரோக்கியம் மற்றும் வேலையின்மை ஏற்பட்டால் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை முதலாளிக்கு மட்டும் இருந்த சுமையை தனி நிதியம் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. . அதன் மூலம், பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பணியாளரின் செயல்திறனை அளவிடுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை தொழில் வழங்குநருக்கு வழங்கப்படுகிறது. மனிதவள வழங்கல் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலத்திரனியல் ஊடகங்களில் சம்பளம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் சட்டத்தின் மூலம் தேசிய தொழிலாளர்களைப் பற்றிய தரவு அமைப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.