பொசன்பௌர்ணமியை முன்னிட்டு இந்தியாவின் பௌத்தமரபு குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி

 ஹோமாகம பொசன் வலயத்தின் ஓர் அங்கமாக, இந்தியாவின் பௌத்த மரபினை சித்தரிக்கும் விசேட கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2023 ஜூன் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியானது இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களின் பிரசன்னத்துக்கு மத்தியில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2.    இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்தின் தாமேக் தூபி, பீஹாரிலுள்ள மகாபோதி விகாரை மற்றும் அசோகரின் தூண்கள், மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி தூபி உள்ளிட்ட இந்திய பௌத்த யாத்திரை தலங்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல நூற்றாண்டுகள் பழமையான சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களும் இங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

3.    இந்தக் கண்காட்சியின் விசேட அம்சமாக அரஹத் மஹிந்த இலங்கைக்கு வருகை தந்ததை சித்தரிக்கும் விசேட அலங்கார விளக்கும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாமல் அன்பு, காருண்யம், மகிழ்ச்சி, பற்றின்மை ஆகிய பௌத்த மதத்தின் நான்கு உண்மைகளுக்கும் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்திற்கான தொனிப் பொருளான ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பினை சித்தரிக்கும் அம்சங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4.    பொசன் பௌர்ணமி தினமானது அரஹத் மஹிந்த இந்தியாவிலிருந்து பௌத்த போதனைகளுடன் இலங்கைக்கு வருகை தந்தமையை குறிக்கின்ற அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புராதன உறவுகளையும் சுட்டிக்காட்டுகின்றது. இந்த நாகரீக பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் நோக்குடன் 15 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட நன்கொடையினை அறிவித்திருந்தமை மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த நன்கொடையின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விகாரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல புனித வெசாக் பண்டிகை கடந்த மாதம் நடைபெற்றபோது கொழும்பில் உள்ள சீமாமாலகய கங்கராமை விகாரையில் விசேட கண்காட்சி ஒன்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

04 ஜூன் 2023 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன