“பெற்றிகலோ கெம்பஸ்” என்பது ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் கூட்டிணைந்து இயங்க விருப்பதால் இனிமேல் அந்த தனியார் பல்கலைக் கழகத்தின் பெயர் “எஸ்.எல்.ரீ – பெற்றிகலோ கெம்பஸ் “என்று அழைக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பெற்றிகலோ கெம்பஸின் ஸ்தாபகருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த (மட்டக்களப்பு) தனியார் பல்கலைக்கழகம் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து ,ஏறாவூரில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வியடத்தை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், ஈஸ்டர் குண்டு வெடிப்பால் நாடு பல பவாதிப்புக்களை எதிர்கொண்டது. மட்டக்களப்பு கெம்பஸ் மூடப்பட்டதால் நாட்டுக்கு வரவேண்டியிருந்த 100 மில்லியன் டொலர்கள் வருமானம் இழக்கப்பட்டடது.
எஸ்எல்ரி மட்டக்களப்பு மட்டக்களப்புப் பல்கலைக் கழகத்தில் தற்போது சுமார் 3000 தொடக்கம் 4,000 ஆயிரம் மாணவர்கள் தமது துறைசார்ந்த பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வசதி உள்ளது.
அதேவேளை ,அதன் மூன்றாம் கட்ட நிருமாணப் பணிகளும் முடிவடைந்த பின்னர் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் கற்கக் கூடிய ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக அது திகழும்.
இது இலங்கை தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
அதேவேளை நடைமுறையில் ஒப்பீட்டளவில் அரைவாசிக் கட்டணத்துடனேயே மாணவர்கள் தமது பட்டப்படிப்பை முடித்துக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும்.
அடுத்தாண்டு ஜனவரியில் கற்கைகள் ஆரம்பிக்கப்படும். இலங்கையின் எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் இல்லாத வசதிகளுடன் நாட்டின் அதியுயர் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் ஒழுக்கமான கல்வியும் இங்கே போதிக்கப்படும்’ என்றார்.
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகம் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து படையினரால் இந்த பல்கலைக்கழகம் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது .
இவ்விடயம் தொடர்பாக இடம்பெற்ற முன்னெடுப்புகளின் பிரகாரம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உத்தரவிட்டிருந்தார் என்று தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,
இந்த விடயத்தை வெறுமனே விசாரணை ஆணைக்குழுக்களோடு மாத்திரம் விட்டு விடாமல் அரசாங்கம் புலனாய்வுப் பிரிவைக் கொண்டும் தேவையேற்படுமிடத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றும் விசாரிக்க வேண்டும்.
இதில் யார்யார் எந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்டிருந்தார்கள்இ சனல் 4 இல் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்கள் உண்மையா என்பதெல்லாம் விசாரணையில் கண்டறியப்பட வேண்டும்.
சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும். இனி அவை வெளிவரத் தொடங்கும் என்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பெற்றிகலோ கெம்பஸின் ஸ்தாபகருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
ஏறாவூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி. அஸனார் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.