நோயாளிகளின் உரிமைகள் பொறுப்புகளைப்பலப்படுத்துவதற்கு பரிந்துரை

நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களைப் பலப்படுத்துவதற்கு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக முன்மொழிவொன்றைத் தயாரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக தலைமையில் 2023.08.11ஆம் திகதி கூடிய சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மருத்துவ சபை, சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களும் நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தற்போதுள்ள விதிமுறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம்  இடம்பெற்றது.

எட்டாவது பாராளுமன்றத்தின் சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான முன்மொழிவுகளை மேலும் கலந்துரையாடி அவற்றைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட வைத்திய தொழில்துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து செயற்படும் தரப்பினர்களால் இவ்விடயம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தற்பொழுது சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மற்றும இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த பிரேரணையை ஒப்பிட்டு இறுதிப் பிரேரணையை தயாரிப்பதற்குக் குழு தீர்மானித்தது.

இதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதி வைத்தியகலாநிதி ஷலாலா அஹ்மடோவா இணக்கம் தெரிவித்தார்.

மேலும், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இது தொடர்பான முன்மொழிவுகளை ஆய்வு செய்யவும், இந்த முன்மொழிவை வலுப்படுத்த அந்த முன்மொழிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளவும் குழு பரிந்துரைத்தது.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) ராஜித சேனாரத்ன, (வைத்தியகலாநிதி) கௌரவ கயாஷான் நாவனந்த, கௌரவ ஜகத்குமார சுமித்ராரச்சி, (வைத்தியகலாநிதி) கௌரவ உபுல் கலப்பதி மற்றும் கௌரவ லலித் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன