நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின் முக்கியத்தை எடுத்துக்காட்டியதாக சுட்டிக்காட்டிய சீன ஜனாதிபதி, இலங்கை கொண்டுள்ள மத்தியஸ்தமான நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு (20) சீன மக்கள் பொதுச் சபையில் நடைபெற்றது.
இதன்போது சீன ஜனாதிபதியினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சீனாவின் “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்திற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டத்தை “பெல்ட் அண்ட் ரோட்” வேலைத்திட்டத்தின் கீழான முதலாவது வேலைத்திட்டங்களாக கருதுவதாகவும், இலங்கை உற்பத்திகளை சீனாவிற்கு இறக்குமதி செய்யும் அதேநேரம், இலங்கைக்குள் சீன முதலீடுகளை அதிகளவில் மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சிநேகபூர்வ, நடைமுறை மற்றும் துரித ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாரெனவும் சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.
பாகியன் பிக்கு மற்றும் ஷென் ஹர் ஆகியோரின் குறிப்புக்கள் ஊடாக சீன – இலங்கை நட்புறவு தொடர்பிலான பல்வேறு வரலாற்று தகவல்கள் தெரியவருவதாகவும் ஷி ஜின்பிங் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமைத்துவத்தின் கீழ், சீன மக்கள் ஒன்றிணைந்து உயர் பொருளாதார வளர்ச்சியினூடாக புதிய சீனாவின் தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இலங்கை எதிர்கொண்டிருந்த கடுமையான நெருக்கடியிலிருந்து இலங்கை சமூகத்தை மீட்டெடுத்து, அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழி செய்துள்ளார் எனவும் சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆரம்பகாலம் முதல் சீனா இலங்கைக்கு வழங்கி வந்துள்ள ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஷி ஜின்பிங் தொடர்ச்சியாக இலங்கையுடன் சிநேபூர்வமானதும், சுமூகமானதுமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றமையையும் பாராட்டினார்.
பாகியன் பிக்குவின் இலங்கை பயணத்தை நினைவூட்டும் வகையில் “வௌ்ளைக் குதிரை” விகாரையில் இலங்கை பௌத்த மண்டபம் ஒன்றையும் தூபியொன்றையும் நிர்மாணிக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த அதேநேரம், அந்த பணிகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு கிட்டுமென சீன ஜனாதிபதியும் உறுதியளித்தார்.
சீனா, மியன்மார், இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள், ஒரே சமுத்திரத்தை அண்டிய வர்த்தக துறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது மிகவும் செயலாற்றல் மிக்க விடயமென சுட்டிக்காட்டிய சீன ஜனாதிபதி, அதற்கான ஆரம்பத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்திச் செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்து சமுத்திரத்தின் அமைதியையும் தனித்துவத்தையும் பேண இலங்கை அர்ப்பணிக்கும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசியாவை அபிவிருத்தி வலயமாக மாற்றும் செயற்பாடுகளுக்காக சீனாவும் இந்தியாவும் கைகோர்த்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
2048 இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைப்பதே தனது இலக்காகுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த இலக்கைவெற்றிக்கொள்வதற்கு “பெல்ட் அண்ட் ரோட்” மூன்றாவது சர்வதேச மாநாட்டில் முன்மொழியப்பட்ட எட்டு அம்சக் கொள்கை பயனுள்ளதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து காசா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டு யுத்த நிலைமை தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
இந்தச் சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சாண்ரா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.