தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு முன்னெடுக்கப்படும்

தேரவாத பௌத்த தர்மத்தை சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதற்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்திருக்கும் நிலையில், மூன்று பீடங்கள் மற்றும் மகா சங்கத்தினர் மற்றும் கல்வியியலாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த பணிகளை முன்னெடுக்க உள்ளதாவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.

மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் 300 பிக்குகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இலங்கை ராமண்ய பீடத்தின் 73 வது உபசம்பதா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை ராமண்ய பீடத்தின் 73 வது உபசம்பதா நிகழ்வானது (20) முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையில் மாத்தளை பண்டாரபொல சுதுகங்கை கரையோரப் பகுதியில் நடத்தப்படவுள்ளது.

ராமண்ய பீடத்தின் இதன்போது, இலங்கை ராமண்ய பீடதிபதி மகுலேவே விமல நாயக்க தேரருக்கு ஜனாதிபதியால் “தர்ஷன விஷாரத” பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அதேபோல் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேரர் மற்றும் வண. முகுனேவல அநுருத்த தேரருக்கும் கௌரவ நாமங்களுக்கான சான்றுப் பத்திரங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை ராமக்ஞ பீடத்தின் 73 ஆவது உபசம்பதா நிகழ்வில் கலந்துகொண்டதன் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து ராமக்ஞ பீடத்தினால் தயாரிக்கப்பட்ட “படிபாத சாஸ்திரீய சங்கிராய” தொகுப்பும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ராமண்ய பீடத்தின் 73 ஆவது உப சம்பதா நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தமைக்கும், எனது இந்திய விஜயத்தினை கருத்தில் கொண்டு இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை மாற்றியுள்ளமைக்கும் நன்றி.

இம்முறை எனது இந்திய விஜயம் இருநாட்டு பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் பொருளாதாரம் சரிவடைந்துக் காணப்பட்ட காலத்தில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறுவதற்குமானதாகவே அமையும்.

ராமண்ய பீடத்தின் உபசம்பதா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை மாத்தளை மக்களுக்கு சிறந்ததாகும். பௌத்த வரலாற்றில் மாத்தளை முக்கிய இடம் வகிக்கிறது. திரிபீடகத்தை பாதுகாக்கும் பணிகள் மாத்தளையின் அலுவிஹாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. திரிபீடகத்தை பாதுகாப்பது பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாகவும். பௌத்த நாடுகள் என்ற வகையில் திரிபீடகத்தை பாதுகாத்து உலகிற்கு கொண்டுச் செல்லும் பணிகளை முனெடுப்போம்.

மகாயான பௌத்திற்குள் திரிபீடகத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் லோட்டஸ் சூத்திரம் அடங்கிய மகாயான திரிபீடகம் உலகத்தின் முதலாவது பதிப்பாக காணப்படுகிறது. அதன் பின்னரே கிரண்ட்பர்க் பைபிலை அச்சிட்டார். அதேபோல் தேரவாத பௌத்த திரிபீடகமும் தற்போது அச்சுப் பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

தர்மத்தை பாதுகாக்க தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தக்கூடிய இயலுமை உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெரிவு தற்போதும் நாட்டில் காணப்படும் நிலையில் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்கு அதன் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் துட்டகைமுனு அரசரை பற்றிய விடயங்களை பதிவிட்டால் அவர் பற்றிய கேள்விகளுக்கு அதனால் பதிலளிக்க முடியும், அதேபோல் விக்டோரியா மகாராணி பற்றிய தகவல்களை உள்ளடக்கினாலும் அவரை பற்றிய தவல்களை அது வழங்கும், தகவல் வழங்குவதற்கு மேலதிகமாக தகவல்களை ஒலி வடிவில் வழங்கும் இயலுமையும் GPT தொழில்நுட்பம் கொண்டுள்ளது. மேற்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பௌத்த தர்மத்தை பாதுகாக்க முடியும்.

பௌத்தம் என்பது கடவுளை முதன்மை படுத்திய மதம் அல்ல. அது ஒரு தர்மமாகும். விரும்பினால் பின்பற்றலாம், பின்பற்றாமலும் இருக்கலாம். அதனால்தான் தம்ம பதத்தில், தர்மம் மனதால் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனித நுண்ணறிவைப் போலவே, மறுபுறம் செயற்கையான
அறிவும் உள்ளது, இந்த செயற்கை நுண்ணறிவு நமக்கு அச்சுறுத்தலாக இருக்குமா, நமது விருப்பத்திற்கு ஏற்ப அதனை பயன்படுத்திக்கொள்ள முடியுமான என்ற கேள்வியே அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு நம்முன்னே நிற்கும்.

தற்போது சிலர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றனர். ஜப்பானின் கஷுமா என்பவர் hotoke.ai நுட்பத்தை பயன்படுத்தி ஜென் பௌத்தம் தொடர்பிலான கேள்விகளுக்கு விளக்கமளித்து வருவதை காணக்கூடியதாக இருந்தது. திட்டத்தில் ஒருவர் ஜென் பௌத்தம் தொடர்பான பதில்களை எவ்வாறு அளிக்கிறார். ஆனால், அவற்றில் பௌத்த மதம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மதங்கள் பற்றிய விடயங்களும் திரிவுபடுத்தப்பட்டே கூறப்படுகின்றன. நாம் அவ்வாறானதொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அதற்கு இடமளிக்கவும் கூடாது.

இவ்வாறான மதம் தொடர்பிலான திரிபு படுத்தப்பட்ட கருத்துக்கள் பரப்படும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இல்லை என்பதால், அது பற்றி அவதானம் செலுத்த வேண்டும்.

அதனால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தர்மம் தொடர்பில் விளக்கமளிக்கும் போது மிகத் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அதற்காக 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதோடு, மேலதிகமாக அவசியப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்.

தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டு செல்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்து தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதன்போது தர்மம் பற்றி ஆழமாக ஆராய வேண்டும். அதனால் இந்த வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் உதவிகளை எதிர்பார்ப்பதோடு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.

தங்களது கைகளிலிருக்கும் கைபேசிகளில் பரவும் விடயங்களை விட பெருமளவானோர் பைபிலையோ திரிபீடகத்தையோ வாசிப்பதில்லை.

ஆரம்ப காலத்திலிருந்தே தேரவாத பௌத்தத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த இலங்கை அதனை மேலும் பாதுகாத்து உலகிற்கு கொண்டுச் செல்ல வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்த உன்னதமான பணியை நிறைவேற்றுவதற்கான வேலைத் திட்டத்திற்கு மகா சங்கத்தினர் மற்றும் கல்வியியலாளர்களின் ஆலோசனைகளை கோருகிறோம். அதன் ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரான பணிகளை பேச்சுவார்த்தை மூலமான முன்னெடுக்க முடியும்.” என்றார்.

ராமண்ய பீடத்தின் பிரதி பதிவாளர் வண. நெதகமுவே விஜய மைத்திரி தேரர்,

இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக எரிமலையாக வெடிப்பை போல் காணப்பட்ட நாட்டை பொறுப்பேற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை. அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அன்று அவர் பொறுப்பேற்கத் தவறியிருந்தால் இந்நாட்டின் ஜனநாயகத்திற்கும் தீ மூட்டப்பட்டிருக்கும் அதனால் நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்ட வேண்டும்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய,

ஜனாதிபதி வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த போதிலும், அவர் ராமண்ய பீடத்தின் உபசம்பதா நிகழ்வில் பங்கேற்றமைக்கு நன்றி, அதேபோல் ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப ராமக்ஞ பீடத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமும் வரவேற்கத்தக்கது.

இந்த நாட்களில் வெளியாகும் ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, ​​பிக்குகளிடத்தில் ஒழுக்கம் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அது பற்றி பேசுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்கின்ற போதிலும், ஒழுக்கத்தை மீறும் பிக்குகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சட்ட முறைமைகளை தயாரித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக சட்ட ஒழுங்கு அற்றதாக காணப்பட்ட நாட்டை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை பாராட்ட வேண்டும்.

மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் சமூக நீதிக்கான இயக்கம் வலியுறுத்தியிருந்த ஊழல் தடுப்புக்கான புதிய சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும்.

இலங்கை ராமண்ய பீடத்தின் அனுநாயக்க தேரர்களான, வண. மாத்தளே தம்மகுசல தேரர், கெடம்பே ரஜபவனாதிபதி வண. கெப்பெடியாகொட சிரிவிமல நாயக்க தேரர், வண. கலஹிட்டியாகம விமலதம்ம நாயக்க தேரர், இலங்கை ராமண்ய பீடத்தின் பதிவாளர் வண. அத்தங்கனே சாஸனாரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும். பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர்களான ரோஹன திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கோட்டெகொட,மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தாய்லாந்து தூதுவர் ஜோப் ஹர்தன்போல், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சூலர் ஜெனரல் கலாநிதி எஸ். அதீரா, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி ஜெனரல் விக்கும் லியனகே, மாத்தளை மாவட்டச் செயலாளர் தேஜானி திலகரத்ன, மத்திய மாகாணச் பிரதமச் செயலாளர் ஜீ.எச்.எம்.ஏ.பிரேமசிங்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராமண்ய பீடத்தின் வண. மகுலேவே விமல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் நலம் விசாரித்தார். மத மற்றும் சமூக விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசித்திருந்ததோடு, நாட்டின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு மகாநாயக்க தேரர் பாராட்டு தெரிவித்தார்.

அதனையடுத்து வண. மகுலேவே விமல நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

அத்துடன், மாத்தளை புரிஜ்ஜல சங்கபோதி பிரிவேனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (20) காலை திறந்து வைக்கப்பட்டது.

அதனையடுத்து இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மக்குலேவே ஸ்ரீ விமல தேரர் தலைமையில் ராமக்ஞ பீடத்தின் 73 ஆவது உபசம்பதாக நிகழ்விற்கு இணையாக புத்த பீடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதோடு, அதற்கு மலர் பூஜை செய்யப்பட்டதன் பின்னர் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரால் ஆசி வழங்கப்பட்டது.

பின்னர் விகாரைக்குள் வருகைத்தந்த ஜனாதிபதி அங்கிருந்தவர்களுடன் அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன