தமிழகத்தின் நாகைப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் படகு சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இருப்பினும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக இந்த சேவை ஆரம்பமாகவுள்ள திகதியை தீர்மானிக்க முடியாமல் இருப்பதாக யாழ் இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணிகள் படகில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயண நேரம் 3 மணிநேரம்.ஆரம்ப கட்டணமாக இருவழிப்பயணத்துக்கு ரூபா 52,000/= வரை அறவிடப்படலாம் என தெரியவருகிறது. பயணிகள் 50 கிலோ வரையில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த பயணிகள் படகு சேவை தொடர்பில் நேற்று (05) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கு பதிலளிக்கையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவையை ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் தன்னிடம் அறிவித்ததாக தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கும் மன்னாரில் இருந்து இந்தியாவிற்கும் படகு சேவையை ஆரம்பிப்பதில் உள்ள தடைகளை புரிந்துகொள்ள முடியவில்லை என சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.