கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு அரசாங்க நிதிபற்றியகுழுவில் அங்கீகாரம்

2021ம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2339/31ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் 10 வணிக நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்துக் காணப்படும் பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது மூன்று முறைகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இங்கு தெரியவந்தது. கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உருவாக்கப்பட முன்னர், கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்பட்டு வரும்போது மற்றும் துறைமுக நகரம் அமைக்கப்பட்ட பின்னர் என மூன்று சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதாக, ஒரு முறைமையின் கீழ் கைச்சாத்திடப்படவில்லையென்பதைக் குழு சுட்டிக்காட்டியது. இதனால் இது தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைக் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் குழு பரிந்துரைத்தது.

குறித்த பிரதேசத்துக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

(24) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயங்கள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இரண்டு க்ரிப்டோகரன்சி (Cryptocurrency) கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன