கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார்
இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து இரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவை கனடா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் உயர் ஸ்தானிகருக்கு விளக்கினார். தற்போது கனடாவில் வாழும் இலங்கை வர்த்தகர்களுக்கு இந்நாட்டில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை எதிர்கொள்ளும் முன்னெப்போதுமில்லாத பொருளாதார சவால்களை முறியடித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை உத்தியோகத்தர் இந்திராணி ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு