இந்திய ரூபா பற்றிய தவறான புரிந்துகொள்ளல்களை தெளிவுபடுத்தல்

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவதை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.

பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லைகடந்த வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்குக் காலம் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது. 1979 மே தொடக்கம் இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரித்துள்ளது. தற்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 ஓகத்தில் பிந்தியதாக உட்சேர்க்கப்பட்ட இந்திய ரூபாயுடன் பின்வரும் 16 நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் அட்டவணை

  1. அவுஸ்திரேலிய டொலர்
  2. கனேடிய டொலர்
  3. சீன ரென்மின்பீ
  4.  டெனிஷ் குறோணர்
  5. யூரோ
  6. ஹொங்கொங் டொலர்
  7. இந்திய ரூபா 
  8. யப்பானிய யென் 
  9. நியுசிலாந்து டொலர்
  10. நோர்வே குறோணர்
  11. Pஸ்டேர்லிங் பவுண்
  12. சிங்கப்பூர் டொலர்
  13. சுவிடன் குறோணர்
  14. சுவிஸ் பிராங்க்
  15. தாய்லாந்து பாத்
  16. ஐக்கிய அமெரிக்க டொலர்

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரிப்பதன் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஊக்குவிப்பதாகும். மேலும், இரட்டை மாற்றுதலுடன் தொடர்புடைய மேலதிக பரிமாற்றுச் செலவுகளை அது குறைப்பதுடன் முறையான வங்கித்தொழில் வழியூடாக வர்த்தக் கொடுக்கல்வாங்கல்களை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிக்கும். உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவிற்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்தும் இருக்கும். 

2000 மாச்சில் இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காகவும் குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையில் ஏற்கனவே காணப்படுகின்ற வணிக உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை மத்திய வங்கி இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியின் விருப்பத்தை இந்திய நாணய ஆணையமாகிய இந்திய றிசேர்வ் வங்கிக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவித்தது. அதற்கமைய, இந்திய றிசேர்வ் வங்கியின் ஒப்புதலுடன் 2022 ஓகத்தில் இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமொன்றாக இந்திய ரூபா இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமொன்றாக இந்திய ரூபாவின் பாவனையானது இந்திய றிசேர்வ் வங்கியின் எல்லாவிதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகும்.  

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பது வர்த்தக் கொடுக்கல்வாங்கல்களுக்காக முறைசாரா வழிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக வங்கித்தொழில் வழிகளை பயன்படுத்துவதற்கு வர்த்தகர்களை ஊக்குவித்து, இந்திய ரூபாவை ஐ.அ.டொலராகவும் ஐ.அ.டொலரை இலங்கை ரூபாவாகவும், மறுதலையாகவும் செய்யப்படும் இரட்டை மாற்றுதலுடன் இணைந்த மேலதிக கொடுக்கல்வாங்கல் செலவுகளைக் குறைத்து, சிறியளவிலான வர்த்தகர்களுக்கு விசேடமாக இந்தியன் ரூபா தொடர்புபட்ட சீரான வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்தல் உள்ளடங்கலாக இலங்கைக்கு பல அனுகூலங்களைக் கொண்டுவரும். மேலும், இலங்கைக்கான அதிக சுற்றுலா வழங்கி நாடாக தொடர்ந்தும் இந்தியா விளங்குவதனால் வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்கு பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும். 

பெயர்குறிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவினை அங்கீகரித்தமையானது உள்நாட்டு கொடுப்பனவிற்குஃதீர்ப்பனவிற்கு இலங்கையில் இந்திய ரூபாவை சட்ட பூர்வமான நாணயமாக ஏற்படுத்தியதாகாது. இலங்கையில் வதிபவர்களுக்கிடையில் அல்லது அவர்கள் மத்தியில்  நிறைவேற்றப்படுகின்ற ஏதேனும் கொடுக்கல்வாங்கல் இலங்கையின் சட்டபூர்வ நாணயமாகவிருக்கின்ற இலங்கை ரூபாவிலேயே இருத்தல் வேண்டும். 

அதற்கமைய, இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்ற தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோருகின்றது.  

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன