உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ,12 ஆவது போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வென்று களத்தடுப்பில் ஈடுபட்டது.
பாகிஸ்தான் அணி. அதன் படு மோசமான ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் இன்னிங்ஸில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை.
முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை எடுத்தது.பாகிஸ்தான் அணி தனது ஆட்டத்தை நிதானமாக வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டை 41 ஓட்டங்களிலும், 2 ஆவது விக்கெட்டை 73 ஓட்டங்களிலும் இழந்தது. இதையடுத்து இணைந்த அணித்தலைவர் பாபர் ஆசம் – ரிஸ்வான் இணை மேலும் நிதானமாக விளையாடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். 29.4 ஓவரில் பாபர் ஆசம் 50 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சிராஜ் வேகத்தில் போல்டாகி வெளியேறினார். 155 ஓட்டங்களை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி 171ஓட்டங்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியில் பும்ரா, முகம்மது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ரவிந்திரா ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தித்தினர்.
இந்நிலையில், 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் சுப்மன் கில் 11 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலியும் 16 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் அணித்தலைவர் ரோஹித் சர்மாவும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
6 சிக்சர் 6 பவுண்டரியுடன் 63 பந்துகளில் ரோஹித் 86 ஓட்டங்களை எடுத்தார்.ஷ்ரேயாஸ் 53 ஓட்டங்களும் கே.எல். ராகுல் 19 ஓட்டங்களும் சேர்க்க 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.