IUU மீன்பிடி நடவடிக்கை: அனுமதிப்பத்திரம் பெற்றவர் மாத்திரமே குற்றவாளியாக கருதப்படுகிறார்கள்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்) சட்டமூலத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி. வீரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகரிகளும், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

சட்ட விரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற (IUU) மீன்பிடி நடவடிக்கையின் போது தற்போதைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அனுமதிப்பத்திரம் பெற்றவர் மாத்திரமே குற்றவாளியாக கருதப்படுகிறார்கள். எனினும் அனுமதிப்பத்திரம் பெற்றவர் யார் என்பதை கடற்றொழில் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இதனால் சட்ட நடவடிக்கை எடுப்பது முடியாமல் போகின்றது. புதிய திருத்தத்தின் மூலம் படகின் உரிமையாளர், படகோட்டி, படகின் பணியாட்கள் மற்றும் படகில் பயணிப்பவரை இக்குற்றத்துக்கு பொறுப்பானவராக கருதுவது உள்ளிட்ட விடயங்கள் சட்டமூலத்துக்கான திருத்தங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சட்ட ஏற்பாடுகளை மாற்றித்தருமாறு கடற்றொழில் சங்கங்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சட்டமூலம் 2023 ஜூலை 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது மதிப்பீடுக்காக முன்வைக்கப்பட்டதை அடுத்து சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது. அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் விபத்துக்கு உள்ளாகும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சட்டரீதியான நடவடிக்கைகளைச் செய்து கொடுப்பதற்கும் அமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லை என குழுவின் தலைவர் கௌரவ டி. வீரசிங்க சுட்டிக்காட்டினார். கரையோர மாவட்டங்கள் 15 இலும் கடற்றொழில் அலுவலகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் கடற்றொழில் பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அத்துடன் ஒவ்வொரு பகுதியிலும்  கடற்படையினரின் உதவியையும் பெறுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும் வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள கடற்றொழில் பரிசோதகர்களை அறிமுகமில்லாமல் இருக்கலாம் என்பதால், ஏதாவதொரு பகுதியில் உள்ள மீனவர்கள், தமக்கு விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக அழைக்கக்கூடிய அவசர அழைப்பு சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார்.

அதற்கு மேலதிகமாக, கரையோரங்களில் மீனவர்களால் நிர்மாணிக்கப்படும் தற்காலிக கூடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடயங்கள், மீன்பிடிப் படகுகளின் தரம், படகுகளுக்கான காப்புறுதி மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ கபில அத்துகோரல, கௌரவ கின்ஸ் நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் வர்ணகுமார குழுவின் தலைவரின் அனுமதியுடன் கலந்துகொண்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன