தொல்பொருளியல் திணைக்களத்தில் பல வருடங்களாக நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் காணப்படும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தலையிடும் என அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
உரிய வெற்றிடங்கள் நிரப்பப்படாமையால் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிகள் பூர்த்தியாக்கப்படாமல் இருப்பது நிலைமைகளை சிக்கலாக்குவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு 2023.10.03 ஆம் திகதி அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
2023 மே 24ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் தெல்பொருளியல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக குழு கூடியிருந்தது.
திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு திணைக்களத்தில் உயர் பதவிகளில் காணப்படும் 27 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனத் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாமையால் திணைக்களத்தின் பல்வேறு செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்படி, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுத்தர தலையீடு செய்வதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டில் காணப்படும் தெல்பொருளியல் ஸ்தலங்களை வரைபடமாக்குவது மற்றும் அவற்றை இணையத்தளங்களில் உள்ளீடு செய்யும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இதுவரை 1565 தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.
இது தவிரவும் நாடு முழுவதிலும் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட தெல்பொருள் நினைவுச் சின்னங்கள் 5664 என்றும், இதில் 2773 நினைவுச் சின்னங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் குழுவில் புலப்பட்டது. அடையாளம் காணப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் இணையத்தளத்தில் உள்ளடக்கப்படாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.
உயர் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்கள் காரணமாக அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட தொல்பொருளியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் இணைத்துக் கிராம மட்டத்தில் அதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ள தொல்பொருளியல் தேசிய கொள்கையைத் திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்து அவற்றின் கருத்துக்களையும் பெற்று அதற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு குழு வழங்கிய அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டார். இதற்கமைய ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் அழைத்து, குழு வழங்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
உலக மரபுரிமையாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோ நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க இதுவரை 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
சுழியோடிகளுக்கு ஆயுட் காப்புறுதியைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இதற்கு அமைய, தற்பொழுது இலங்கையிலுள்ள அனைத்துக் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அதில் ஒரு நிறுவனமான செலிங்கோ நிறுவனம் காப்புறுதியை வழங்க முதற்கட்ட இணைக்கத்தை வழங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் 114 கடல்சார் தொல்பொருள் ஸ்தானங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை பற்றிய சகல தகவல்களையும் உள்ளடக்கிய இணையத்தளமொன்று பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குழு முன்னிலையில் தெரிவித்தனர்.
கரையில் நினைவுச் சின்னங்களாக மாத்திரம் உள்ள தொல்பொருட்களை வர்த்தமானியில் வெளியிட முடியும் என்றாலும் கடல்சார் தொன்மைப் பொருட்களை வர்த்தமானியில் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்து அதற்கான சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்குக் குழு வலியுறுத்தியது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் அளவு மற்றும் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பை அவர்கள் பராமரிக்கிறார்களா என்று குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
இருப்பினும், குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தரவு அமைப்பு புதுப்பிக்கப்படவில்லையென்பது இங்கு தெரியவந்தது. இதுபற்றி ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
அத்தனகல்ல பகுதியில் உள்ள பாதை படகுச் சேவையின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்தனகல்ல பாதை படகு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்காக கார்பன் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் சில பகுதிகளைப் புனரமைக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜே. சி. அலவத்துவல, கௌரவ முதிதா பிரஷாந்தி, கௌரவ மஞ்சுள திஸாநாயக்க, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ சஹான் பிரதீப் விதான ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.