உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது 50 வருடங்களுக்கும் மேலாக தாமதமடைவது தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் வினவியது.
சுற்றுலா மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து தலைமையில் அண்மையில் (09) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் காணிகள் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளினால் இந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். இதனால் ஆவணங்களை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததுடன் தற்பொழுது அந்த நடவடிக்கைகள் முறைமைப் படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து குறிப்பிடுகையில், தற்பொழுது காணப்படும் நடவடிக்கைகளை விட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது எனக் குறிப்பிட்டார். அதற்கமைய, சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்னோடித் திட்டமாகக் கண்டி மாவட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக ஏனைய மாவட்டங்களுக்கும் சென்று உறுதிப்பத்திரங்களை சரியாக வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கினார். அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பலாங்கொடை தமன பிரதேசத்தில் பாரம்பரிய கருங்கல் அகழ்வில் ஈடுபடும் சுமார் 7000 பேருக்குக் கருங்கல் உடைப்பதற்கு வருடாந்தம் புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவது பற்றி முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் காண்பது மற்றும் மேம்படுத்துவதற்கு ஒவ்வோர் சுற்றுலா பிரதேசத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இடம்பெற்ற அனைத்துக் குழுக்களினதும் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், தெனியாய சுற்றுச்சூழல் சுற்றுலா வலயத்தின் அபிவிருத்தியின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா சமன்மலி குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கபில அத்துகோரல, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.