மாகாண சபைகள் ,உள்ளூராட்சி சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும்…பிரதமர்

மாகாண சபைகள் இஉள்ளூராட்சி சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் (2023.09.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

மேல்மாகாணத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதிகளவு கழிவுகள் காணப்படுகின்றன. மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பிரச்சினை பெருநகர திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தது. இன்னும் குப்பை முகாமைத்துவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திடீர் வெள்ளம் ஏற்பட்டால் கொழும்பு மாவட்டமே நீரில் மூழ்கும். கம்பஹா நீரில் மூழ்கும். இவ்வாறான விடயங்களை பொதுமக்கள் தரப்பில் இருந்து சிந்தியுங்கள்.

பல வருடங்களாக இருந்து வரும் ஊழியர்களை நிரந்தரமாக்கும் பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இது தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் இன்னும் அறிக்கை இல்லை. கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் வரி அறவீடு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் இலங்கையின் வசதிபடைத்த மாகாணமாகும். வளம் மிக்க மாகாணத்தில் வரி அறவீடு முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் அமைச்சு என்ற வகையில் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

தொலைதூர கிராமங்களில் தகனச்சாலைகள் இல்லை. அத்தகைய திட்டத்திற்கு திறைசேரி பணம் கொடுக்க முடியாது என்று கூற முடியாது. சில நகர சபைகளில் இரண்டு அல்லது மூன்று உள்ளன அவற்றில் செயற்படுவது ஒன்று தான். தொலைதூரப் பகுதிகளில் தகனச் சாலைகள் இல்லாவிட்டால் நகர்ப்புறங்களில் தகனம் செய்வதற்கான செலவு மற்றும் முறை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மாகாண சபையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் எம்மை ஆதரிக்கும் நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து புதிய அணுகுமுறைக்கு நாம் செல்ல வேண்டியது அவசியமாகும். அதனால்தான் மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவகற்றும் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் கலந்துரையாடி கவனம் செலுத்த வேண்டும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தை எடுத்துக் கொண்டால் எத்தனை விடயங்களைச் செய்ய முடியும்? ஆனால் செய்யாத விடயங்கள் எத்தனை? இவற்றை தேர்வு செய்ய அதிகாரிகள் விசேட மாநாடொன்றை நடத்த வேண்டும். இந்த சபைகளில் உள்ள பலர் இந்த கட்டளைச் சட்டத்தை வாசித்திருக்கவும் மாட்டார்கள்.

எமது பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வசதிகளையும் திருப்தியையும் வழங்குவதற்காகவே எமது உள்ளூராட்சி மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. வரி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அவர்கள் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தே வரியினை செலுத்துகிறார்கள். இதில் சேவைகள், பாதுகாப்பு, பிள்ளைகளின் முன்னேற்றம், நல்ல சூழல் போன்ற பல விடயங்கள் உள்ளன. மாகாண சபைகள் இல்லாத நிலையில் ஆளுநரிடம் பல அதிகாரங்கள் குவிந்துள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அமைச்சு தலையிடவோ அல்லது ஆலோசனை வழங்கவோ முடியும்.

ஒன்பது மாகாண சபைகள் உள்ளன. அதிகாரிகள் என்ற வகையில், இந்த அனைத்து மாகாண சபைகளுடனும் தொடர்ந்து உரையாடல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சேவை செய்யுங்கள். எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. உதவியின் ஒரு பகுதி, குறைந்த உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றே அவை வழங்கப்படுகின்றன. இது தொடர்பில் எம்மிடம் ஒரு வேலைத்திட்டம் இருக்க வேண்டும். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் துறையில் பல்வேறு சட்ட திட்டங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன