13 ஆவது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளோம்

13 ஆவது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளோம் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ஒருவாரகால பயணத்தை நிறைவு செய்து நாடுதிரும்பியபோது சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் நிருபர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது. அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு ஒரு வார பயணமாக வந்தார்.
அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு சென்னை வந்தார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை 13-வது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளோம்.
‘இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது. இதற்காக இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நிலை குறித்தும் பேசப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தமிழக அரசு, இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்.
‘ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்தான் அரசியலாக மாறி பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. கலாசார, பொருளாதார ரீதியாக தொடர்பு கொண்ட நாடு. தமிழகத்தில் இருந்து அடிமைகளாக போனவர்கள்தான் மலையக மக்கள். தமிழகம் எங்களின் தொப்புள் கொடி உறவு.
‘தமிழக அரசு எங்களுக்கு எந்தந்த உதவி செய்ய முடியுமோ அது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளேன். இந்தியா-இலங்கை இடையே உள்ள உறவு பலமானது. வேறு நாடுகளுடன் நெருக்கமான உறவு இருக்காது. இலங்கையில் சில தரப்பினர் இந்தியா பற்றி மக்கள் மத்தியில் தவறாக பரப்பி அரசியல் செய்கிறார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உண்மையான நண்பன் யார்? என தெரியவந்தது.
‘இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். பிரதமரை சந்தித்தபோது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான யு.பி.ஐ. பண பரிவர்த்தனைச் முறையை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது’ என்றும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன