13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை – ஹல்துமுல்லைக்கு சிகப்பு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை அதிகாரி ஜனக குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடும் மழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1ம் 2ம் மற்றும் 3ம் கட்ட எச்சரிக்கைகளின் கீழ் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீக்கப்பட்டு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் அனர்த்தத்துடனான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதேபோன்று 4 மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33 பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் 2ம் கட்ட அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இதற்கமைவாக மேலும் 8 பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 35 பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இந்த அனர்த்த எச்சரிக்கை மேலும் அமுலில் இருக்குமென்று தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன