1 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்ட என்கிளேவின் வடக்கில் வசிக்கும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரத்திற்குள் தெற்கே செல்லுமாறு அறிவித்துள்ளது.இந்த பிரதேசத்தில் எதிர்பார்க்கும் தரைத் தாக்குதலுக்கு முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பையடுத்து அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சற்று முன்னர் வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளயிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஆரம்பமாகி இன்றுடன் 7 நாட்கள் கடந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதால், காசாவின் நிலைமை படுமோசமடைந்து வருகிறது. ஹமாஸ் போராளிகளும், அஷ்கெலோன் மீது பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படை, தாங்கள் கைது செய்து வைத்துள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொலியை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் காட்சிகள் எப்போது எடுக்கப்பட்டது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் நாயகம் ஆன்டனியோ குட்டரெஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3700 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்கர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் நிலைகுலைந்து போன காசாவில், பிரதான மின் உற்பத்தி நிலையத்தில் எரிபொருள் இல்லாததினால் , அந்நகரமே இருள் சூழ்ந்து காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன