(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
01. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழிற்றுறைகளின் அபிவிருத்திக்காக சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை தாபித்தல்
உள்ளூர் சினிமாவின் அபிவிருத்திக்காக 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் பிரகாரம் அரச திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், 1980 ஆம் ஆண்டில் அது தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமாக பெயரிடப்பட்டது. தற்போது திரைப்படத் தொழிற்றுறை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து மிகவும் மோசமான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதுடன், தொழிற்றுறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய சுயாதீன நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், திரைப்படத் தொழிற்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும், குறித்த தொழிற்றுறையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுயாதீன நிறுவனமொன்று இருத்தல் பொருத்தமானதெனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, சினிமா மற்றும் திரைப்படக்காட்சி தொழிற்றுறைகளின் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும், வழிகாட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
02. இலங்கையில் நாட்பட்ட தொற்றல்லா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசியக் கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டகம்
இலங்கையில் தொற்றல்லா நோய்கள் காரணமாக இடம்பெறுகின்ற அதிகளவான மரணங்களுக்கு இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய், நாட்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக அமைவதுடன், ஒவ்வொரு ஆண்டும் இந்நோய்களால் 120,000 பேர் இறக்கின்றனர். புகையிலைப் பாவனை, சாராயப் பாவனை, அதிகரித்த உடற்பருமன், உயர் குருதியழுத்தம், குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரித்தல் மற்றும் குருதியில் கொலஸ்ரோலின் அளவு அதிகரித்தல் போன்றன இந்நோய்களுக்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், இந்நோய்களை முற்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனை சேவைகளை வழங்கல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதற்கு இயலுமாகும் வகையில் சுகாதாரக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. தொற்றல்லா நோய்களைத் தடுப்பதற்கான முதலாவது தேசியக் கொள்கை 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த கொள்கையை மீளாய்வுக்குட்படுத்தி மதிப்பீடு செய்து ஏற்புடைய பங்காளர்களின் ஒத்துழைப்புக்களுடன் திருத்தப்பட்ட புதிய கொள்கையொன்று வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையில் நாட்பட்ட தொற்றல்ல நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசியக் கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், குறித்த தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டகத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. முழுமையான அணு ஆய்வுப் பரிசோதனைகளுக்கான தடை ஒப்பந்தத்தை (CTBT) ஏற்புறுதி செய்தல்
1996.09.10 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் முழுமையான அணு ஆய்வுப் பரிசோதனைகளுக்கான தடை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
- குறித்த உடன்படிக்கை மூலம் உலகில் எந்தவொரு இடத்திலும் ‘எந்தவொரு அணு ஆயுதப் பரிசோதனைகளை அல்லது அணு வெடிப்புக்களை’ தடை செய்வதற்கு உறுப்பு நாடுகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. இதுவரைக்கும் 186 நாடுகள் இவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதுடன், 177 நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்று அங்கீகரித்துள்ளன. இலங்கை முழுமையான அணு ஆய்வுப் பரிசோதனைகளுக்கான தடை ஒப்பந்தத்தில் 1996.10.24 அன்று கையொப்பமிட்டுள்ளது. இலங்கை தற்போது முழுமையான அணு ஆய்வுப் பரிசோதனைகளுக்கான தடை ஒப்பந்த அமைப்புடன் இணைந்து பயிற்சிகள், இயலளவு விருத்தி, தரவுகள் மற்றும் தகவல்களை விநியோகித்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்புடன் செயலாற்றி வருகின்றது. குறித்த ஒப்பந்தத்தை ஏற்புறுதி செய்வதன் மூலம், அணு ஆயுதங்களற்ற உலக அமைதிக்கும் பாதுகாப்புக்குமான செயற்பாட்டாளராக இலங்கையின் இராஜதந்திர வகிபாங்குகளை ஏற்றுக்கொள்வதும், சுனாமி எச்சரிக்கைகள், காலநிலை மாற்றங்கள் மற்றும் நில ஆய்வுகள் போன்றன இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அனுகூலங்களைப் பெற்றுத்தருகின்ற குடிசார் மற்றும் விஞ்ஞான ரீதியான நோக்கங்களுக்கான பயனுள்ள தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இயலுமை கிட்டும். அதற்கமைய, இலங்கை முழுமையான அணு ஆய்வுப் பரிசோதனைகளுக்கான தடை ஒப்பந்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கும், குறித்த ஒப்பந்தத்தின் சட்ட ஏற்பாடுகளை வலுவாக்கம் செய்வதற்காகவும் சட்டம் இயற்றுவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கம்பனியின் செயலாளர்களுக்குரிய கட்டளைகள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இற்றைப்படுத்தல்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் இணையவழியூடாக வழங்கப்படுகின்றமையால், குறித்த பணிகளை முறையான வகையில் மேற்கொண்டு செல்வதற்காக 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் விதிக்கப்பட்டுள்ள கம்பனியின் செயலாளர்களுக்கான ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பங்கீடுபாட்டாளர்கள் மற்றும் ஆலோசனைச் செயற்குழுவின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கருத்தில் கொண்டு கம்பனிச் செயலாளர்களுக்கான திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் 2023.03.17 ஆம் திகதிய 2323/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்
இலங்கையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தேசிய அளவீட்டு நியமங்களைப் பேணிச் செல்வதும், பல்வேறு துறைகளுக்கான அளவீட்டு சேவைகளை வழங்குவதும், அளவீடுகளின் அடிப்படையிலான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் சேவைகள் செயற்பாடுகளின் மூலம் நியாயத்தை உறுதிப்படுத்துவதும், அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் முக்கிய பணிகளாகும். அதற்கமைய, 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 3(ஈ) உபபிரிவின் கீழ் தேசிய அளவீட்டு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2022.06.16 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் அளவீட்டு விஞ்ஞான ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவியை வெளியிட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் 2022.08.26 ஆம் திகதிய 2294/54 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதியை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. பெறுமதி சேர் வரி (VAT) விடுவித்தலின் அடிப்படை விதிமுறை மற்றும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமையை நீக்குதல்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு வேலைத்திட்டத்திற்கமைய, பெறுமதி சேர் வரி பற்றிய முக்கிய இரண்டு மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதன்கீழ், அதிகளவு விடுவித்தலை நீக்கி பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை மறுசீரமைப்புச் செய்தல், இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்பட வேண்டியுள்ளது. தற்போதுள்ள பெறுமதி சேர் வரியை விடுவித்தல் மீண்டும் அடிப்படை விதிமுறைகளுக்கமைய அண்ணளவாக மொத்தத் தேசிய உற்பத்தியின் 1.2மூ வீதமான வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு. அதற்கமைய, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கான விடுவிப்புக்களைப் போலவே, குறைந்த வரமானங் கொண்ட குடும்பங்கள் மீதான அழுத்தங்களை இலகுபடுத்துகின்ற மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளைப் பாதுகாக்கின்ற விடுவிப்புக்களைத் தொடர்ந்தும் பேணிக்கொண்டு, பெறுமதி சேர் வரி விடுவிப்புகளிலிருந்து அதிகளவை நீக்குவதற்கும், பெறுமதி சேர் வரியை மீளச் செலுத்துவதற்காக மிகவும் முறைசார்ந்த பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தி தற்போது நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமையை 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அகற்றுவதற்கு ஏற்றாற் போல் பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்கமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நீதிமன்றத்திற்கு, நியாயசபைக்கு அல்லது நீதி நிறுவனமொன்றை அவமதித்தல் பற்றிய சட்டமூலம்
‘நீதிமன்றத்தை அவமதித்தல்’ தவறுகள் பற்றி தெளிவானதும் திட்டவட்டமானதுமான சட்ட ஏற்பாடுகள் மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்ற நிலைமைகள், எதிர்வழக்குரைப்பு மற்றும் தண்டனைகளைத் தளர்த்துதல் மற்றும் தண்டனைகளைத் தளர்த்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கை முறைகள் உள்ளடங்கலாக ‘நீதிமன்றத்தை அவமதித்தல்’ பற்றிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2022.06.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. ஹொரணை ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தல்
ஹொரணை ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளவு போதாமையால், கழிவுநீர் சூழவுள்ள உபரிநீர்க் கால்வாய்களுக்கு விடுவிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதனால், ஹொரணை ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மேம்படுத்தலின் கீழ் நாளொன்றுக்கு 2000 கனமீற்றர் கொள்ளவுடைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமொன்றைத் துரிதமாக நிர்மாணிக்குமாறு உள்ளூராட்சி அதிகாரசபை இலங்கை முதலீட்டுச் சபையிடம் கோரியுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தி இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணிப்பாளர் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியில் 1,110 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி ஹொரணை ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. ஸ்ரீலங்கன் விமானசேவையின் ஹனிவெல் துணை மின்வழங்கல் அலகு ((Honeywell APUs) திருத்த வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கல்
ஸ்ரீலங்கன் விமானசேவையின் ஹனிவெல் துணை மின்வழங்கல் அலகுகளின் (Honeywell APUs) திருத்த வேலைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக மூன்று விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, ஹனிவெல் துணை மின்வழங்கல் அலகு (Honeywell APUs) திருத்த வேலைகளுக்கான ஒப்பந்தம் 02 வருடங்களுக்கு 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு விலை விபரக்குறிப்புக்கள் அடங்கிய பதிலளிக்கப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுவைச் சமர்ப்பித்த Honeywell International SARL நிறுவனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்தல்
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்தல் மற்றும் அதுதொடர்பான அனைத்து விடயங்களுக்குமான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை ஒருசில சந்தர்ப்பங்களில் 97% சதவீதத்தால் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படுகின்ற சமகால பொருளாதார உறுதிப்பாட்டு வேலைத்திட்டத்தின் விளைவாக அமெரிக்க டொலரின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. அதற்கமைய, 60 வகையான மருந்துகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை 2023.06.15 தொடக்கம் அமுலாகும் வகையில் 16%A சதவீதத்தினால் குறைப்பதற்காகவும், மற்றும் மூன்று மாதங்களுக்கொருமுறை மருந்துகளின் விலைகளை மீளாய்வு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.