இலங்கை மின்சாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஆகியவற்றின் ஐந்தொகை விடயங்களை மீள்கட்டமைப்புச் செய்வதற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான குறைநிரப்பு மதிப்பீடு அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருப்பதுடன், இதன் ஊடாக 231.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற கடனை அடைப்பதற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொண்ட தொகையை அடைப்பதற்கும், திறைசேரி இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் பெற்ற கடனை அடைப்பதற்கும் இது பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (31) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட பின்னர் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதன்மூலம் கிடைக்கும் தொயைில் இலங்கை மின்சார சபைக்கு 129 பில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்படும் என்றும் எஞ்சிய 102 பில்லியன் ரூபா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தற்போது 1 பில்லியன் டொலர் நட்டத்தில் உள்ளதாகவும், மொத்த கடனில் 30%க்கு மட்டுமே இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்றும் தெரியவந்தது.
அத்துடன், இந்த குறைநிரப்பு மதிப்பீட்டுத் தொகை கிடைத்த பின்னர் இலங்கை மின்சார சபையினால் செலுத்த வேண்டிய கடன் தொகை 300 பில்லியன் 400 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், வருடாந்த நிதி அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பாக 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள் குறித்த காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், இதுவரை வருடாந்த நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச நிறுவனங்களைக் காண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
மேலும், மின்கட்டண உயர்வு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது அதிக மழை பெய்து வருவதால், இனி வரும் மின் கட்டண திருத்தத்தில் அதிக அளவில் நீர் மின் உற்பத்தி செய்து மக்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இவ்வாறான நிலையில், செலவுக்கு ஏற்ற வகையில் விலையத் தீர்மானிப்பது தொடர்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை விலைக் கட்டணத்தை மறுசீரமைக்கும் தீர்மானத்தையும் குழு பாராட்டியது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிமல் லான்சா, கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.