வரலாற்று தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் கட்டிடங்களை நவீனப்படுத்த நடவடிக்கை

பழங்கால கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கும் வகையில் நவீனமயமாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் ஜோர்ஜியாவின் இலங்கைப் பிரதிநிதி திருமதி. நினோ மக்விலாட்சே உள்ளிட்ட ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் (5) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையிலுள்ள புராதன கட்டிடங்களை முதலீட்டு வாய்ப்புகளுக்காக உரிய முறையில் பயன்படுத்துவது மற்றும் ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு கபூர் கட்டிடம் மற்றும் கொழும்பு “எய்ட் கிளப்” கட்டிடம் என பல இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வரலாற்று தொன்மைக்கு சேதம் விளைவிக்காத வகையில் இந்த கட்டிடங்கள்  நவீனமயப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்நாட்டில் உள்ள பெரும்பாலான பழமையான கட்டிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருகின்றன. அவற்றை நவீனமயமாக்கி முதலீடுகளுக்கு உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல தீர்க்கப்பட்டு வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்த நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வேறு இடங்களைத் தேடி அதற்கேற்ற வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள இவ்வாறான இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் அந்த இடங்களையும் இந்த வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (சொத்து) ஈ.ஏ.சி. பிரியசாந்த உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன