வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை

இலங்கையில் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 8 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வடமேல், தென், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு, ஊவா மாகாணங்களில் இந்தப் பணி ஆரம்பிக்கப்படும்.
மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் இருக்கும் முறை (eRL 1.0)  வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளை அலுவலகங்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 மற்றும் ஒக்டோபர் 2 ஆம் திகதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்படும். இணையவழியில் வருமான அனுமதிகளைப் பெறுவதற்கான வசதியும் 06 அக்டோபர் 2023 அன்று நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
வாகன வருமான அனுமதி பத்திரம் வழங்கும் முறைமையினை நவீனமயப்படுத்துவதற்கு இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைவாக இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
2009 டிசம்பர் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடைமுறை இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு வசதி செய்யப்பட்ட முதல் இணைக்கப்பட்ட அரசாங்க பரிவர்த்தனை சேவையாகும். வாகன வருமான அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு பிரதேச செயலகங்களால் பயன்படுத்தப்படும் மையப்படுத்தப்பட்ட இணைய தளமாக இயங்கும் இந்த கட்டமைப்பு ஊடாக சேவைகளை புதுப்பிப்பதற்கான இணையவழி சேவையையும் வழங்குகிறது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண மோட்டார் திணைக்களங்கள், காப்புறுதி நிறுவனங்கள், வாகன புகைப் பரிசோதனை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரிவுகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வாகன வருமான பத்திரநடை முறையின் மூலம் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் சேவைகளை பெற்றுள்ளனர். இதன் மூலம் 10 முதல் 12 பில்லியன் ரூபாய் வரை வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன