வரவு செலவு திட்டத்தில், சிறு , மத்திய தர கைத்தொழில்களுக்கு வங்கிக் கடன் சலுகை

யாசகம் செய்யும் நாட்டுக்கு பதிலாக வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவது எந்த அளவு கடினமாக இருந்தாலும் அதற்கு அவசியமான தீர்மானங்களை தற்காலத்தில் உரிய வகையில் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் நேற்று (01) நடைபெற்ற தொழிற்சாலைகளுக்கான, தேசிய கைத்தொழில் விருது விழா – 2023 இல் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வற்” வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானத்தை தானோ அல்லது அமைச்சரவையோ விருப்பத்துடன் தேற்கொள்ளவில்லை என்றும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காகவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களுக்கு உண்மையை கூறி நாட்டுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதே தலைமைத்துவப் பண்பாகும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கி வரும் தருவாயில் கடினமான தீர்மானங்களை மேற்கொள்வது பாராளுமன்றத்திற்கு மேலும் நெருக்கடியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

நாட்டுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு இளைஞர் தலைமைத்துவமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்காக சேவையாற்றக்கூடிய இளம் அமைச்சர்கள் குழுவினர் அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகவும், அவர்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டளவில் சுமூகமான பொருளாதார நிலைமையொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வரவு செலவு திட்டத்தில், சிறு மற்றும் மத்திய தர கைத்தொழிலாளர்களுக்கான வங்கிக் கடன் சலுகை தொடர்பில் அறிவிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திகளை வலுவூட்டுவதற்காக, கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்காக, 21 பிரதான தொழில் துறைகள் மற்றும் 61 உப தொழில் துறைகளை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த 300 தொழில்முனைவோருக்கு பிளாட்டினம் தங்க விருதுகளும், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று விருது பெற்றவர்களைப் பார்த்தபோது, ​​கடந்த வருடம் நினைவுக்கு வந்தது. கடந்த வருடத்தில் இந்தத் தொழில்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்ற கேள்விக்குறி காணப்பட்டது. மின்சாரம் இல்லாமை மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வியாபாரங்கள் கைவிடப்பட்டன.

இன்று எதிர்பாராத வகையில் பெருமளவானவர்கள் தங்கள் தொழில்களில் மீண்டும் ஈடுபட்டு வெற்றிகரமாக முனனோக்கிச் செல்கிறார்கள். சிறு மற்றும் மத்திய தர தொழிற்சாலைகள் பலவும் குறுகிய காலத்தில் மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. வங்கிக் கடன், சந்தை வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

அடுத்த வரவு செலவு திட்டத்தில், சிறு மற்றும் மத்திய தர கைத்தொழிலாளர்களுக்கான வங்கிக் கடன் சலுகை தொடர்பில் அறிவிக்க எதிர்பார்த்திருப்பதோடு, அந்த செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம்.

சரிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தை நாம் வகுத்துள்ளோம். அதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்துடனும் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம்.

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுமை நம்மிடம் இருக்கிறதா என்பது தொடர்பிலேயே அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக எமது வருடாந்த வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை அனைத்து தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும்.

கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கான ஒதுக்கீடுகளை அடுத்த வரவு செலவு திட்டத்தில் மேற்கொள்ளவிருக்கிறோம். கடனை செலுத்தாதிருந்தால் நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோம். எமது ரூபாவின் தரத்தையும் பேணிக்கொண்டு கடன்களை செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் வரவு செலவு திட்டத்திற்கு தேவையான நிதி இல்லாத போது மத்திய வங்கியில் பணம் அச்சிடப்பட்டது. ஆனால் இப்போது அதை செய்ய முடியாதென சட்டரீதியாகவே தடைபோடப்பட்டுள்ளது. வங்கிக் கடன்களையும் பெற முடியாது. கடந்த காலங்களின் காணப்பட்ட முறையற்ற நிதிச் செயற்பாடுகளே அதற்கு காரணமாகும். அடுத்த வருடத்தில் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.

அடுத்த வருடத்திலும் நாடு வங்குரோத்தடையாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனில் நாம் வருமானத்தை தேட வேண்டும். அதற்காகவே “வற்” வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இது எந்தவொரு அரசாங்கத்திற்கும் கடினமான நிலைமையாகும்.

அரசாங்கத்திற்கும் தேர்தல் நெருங்கி வரும் தருவாயிலிருக்கும் பாராளுமன்றத்திற்கும் இது மிகக் கட்டினமானதாகும். இருப்பினும் அதனை செய்யாவிட்டால் அனைவரினதும் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும். அதனால் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலாவது நாட்டிற்கான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை நானும், அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

தொடர்ச்சியாக நாம் யாசகம் பெறும் நாடாக இருக்க முடியாது. நாம் எமது வலுவுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விருப்பமில்லாமல் சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பலர் விமர்சித்தாலும் அதனை செய்திருக்காவிட்டால் நாடு மீண்டும் கடந்த வருடத்திலிருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். இவ்வருடத்தில் +7 ஆக எமது பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்றது. இன்றளவில் நூற்றுக்கு + 5 ஆக காணப்படுகின்றது. அதனால் நாம் தொடர்ச்சியாக முன்னோக்கிச் செல்வதா பின்னோக்கி நகர்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மக்களுக்கு உண்மையை கூறி நாட்டுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதே தலைமைத்துவப் பண்பாகும். மேற்படி தீர்மானத்தினால் சிறு தொகையை ஈட்டிக்கொண்டு அதனைக் கொண்டு சிறு மற்றும் மத்திய தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிக் கடன் சலுகைகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் மேற்படி தொழிற்சாலைகள் சரிவை சந்திக்கும்.

தொழிமுயற்சியாளர்கள் என்ற வகையில் நீங்களும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலாவது நாட்டுக்கான தீர்மானங்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும் நாட்டை முன்னேற்றும் தீர்மானத்துடன் முன்னோக்கிச் செல்வோம். அதனால் யாசகம் பெறும் நாட்டுக்கு மாறான சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப முடியும். இந்நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்குமென நான் கருதுகிறேன். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம். தற்போது நெருக்கடியாக இருந்தாலும் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் சுமூகமாக நிலைமை உருவாகும்.

2024 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும, அமைச்சுகளின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள், பிரதான தொழிற்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன