நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார்.
துரதிஷ்டவசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (29) கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்து பீட மகாநாயக்க வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நலம் விசாரித்தார். அதனையடுத்து தேரர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து பீடத்தின் அனுநாயக்க வண. திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
வரலாற்று சிறப்புமிக்க முதியங்கனை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண. முருந்தெனியே ஸ்ரீ தம்மரத்தன நாயக்க தேரரும் மேற்படி சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அதனையடுத்து ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, வண. ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வண. வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரரை சந்தித்த போது, விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அராசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர்,
“கடந்த காலத்தில் நாடு பெரும் பொருளாதார சரிவைக் கண்டது. நெருக்கடியான காலத்தில் நாட்டை மீட்பதற்கான உங்களுடைய முயற்சிகள் உன்னதமானவை. அதனால் உங்களுடைய தனிப்பட்ட சொத்துக்களையும் இழக்க நேரிட்டது. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் இயலுமை உங்களுக்கு உள்ளது. அதற்காக உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதமும் பாதுகாப்பும் கிட்ட வேண்டும்.
அதேபோல் குருந்தி விகாரையை அண்டிய பிரதேச மக்கள் இதுவரையில் ஒற்றுமையாக செயற்பட்டனர். இருப்பினும் அண்மையில் குழுவொன்று அங்கு நுழைந்து குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றிய விடயங்களைக் கண்டறிய வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கும் போது, வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். வெளிநாட்டு கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்துள்ளோம்.
இன்று வங்கிகள் நெருக்கடி நிலையில் இருக்கின்றன. அதனால் வங்கிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது கடினமாகியுள்ளது. அனைத்து உள்நாட்டு வங்கிகளும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன. வங்கிக் கட்டமைப்பு சரிவடைந்தால் நிதி நெருக்கடி ஏற்படும். அதனையடுத்து சேமலாப நிதியத்திலிருந்து மத்திய வங்கி கடன் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. அதனை நீண்ட கால பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதனால் வழங்கப்படும் வட்டி வீதத்தில் சிறிய மாற்றம் ஏற்படும். அதனால் வைப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கடந்த வருடத்தில் சேமலாப நிதியத்தின் வைப்பாளர்களுக்கு 9 % சதவீத குறைந்தபட்ச வட்டி வீதத்தை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தோம். குறைந்த பட்ச வட்டி வீதத்தை சட்டமாகவும் நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல் கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம். புதிய மத்திய வங்கிச் சட்டமொன்றை கொண்டுவரவும் எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் தனியார் கடன்கள் பற்றி பேசப்படும். அதன்போது கடனில் ஒரு தொகையை குறைத்துக்கொள்ளல் அல்லது கடன் செலுத்துவதற்கான கால நீடிப்பொன்றைக் கோர எதிர்பார்த்துள்ளோம்.
அது தொடர்பிலான கலந்துரையாடல்களை ஒக்டோபர் முதல் வாரமளவில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வங்குரோத்து நிலையிலிருந்து நாம் மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை சீராக முன்னெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
இலங்கையின் இறக்குமதியை விடவும் ஏற்றுமதி குறைவாக உள்ளது. அதனால் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய ஏற்றுமதிப் பொருளாதாரம் ஒன்றை கட்டமைக்க வேண்டும். பிராந்தியத்திற்குள் பொருளாதார ரீதியான பலன்களை அடைந்துகொள்ள முடியும். அதன் பின்னர் கடன் மீள் செலுத்துகைக்கான திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டும்.
1948 இல் பிராந்தியத்தில் எமக்கு கிடைத்திருந்த இடம் தற்போது இல்லாமல் போயுள்ளது. அதனால் எதிர்காலம் தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஆராய வேண்டும். ஆரம்பத்தை மாத்திரமே என்னால் ஏற்படுத்த முடியும். அந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்ல இந்நாட்டு இளம் சந்ததியினர் முன்வர வேண்டும்.
அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்க வேண்டும். புதிய தெரிவுடன் தொழில்நுட்பத்துடனும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தலைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும். இன்று செயற்கை நுண்ணறிவு பற்றி முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கிறது. அதேபோல் புத்த தர்மம் பற்றியும் பேசப்படுகிறது. தேரவாத பௌத்த நாடுகள் எவையும் முன்னேற்றம் பெறவில்லை. தாய்லாந்துடன் ஒப்பிடும்போது இலங்கை பின்னணியிலேயே உள்ளது. இலங்கையும் தாய்லாந்தும் முன்னேற்றம் காண வேண்டும். தாய்லாந்துடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
அதனால் தேரவாத நாடுகள் இரண்டும் முதன்முறையாக ஒன்றுபடும். அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளேன். அதனை வரலாற்று சிறப்பு மிக்க கண்டி நகரத்தில் கைச்சாத்திடுவதற்கான இயலுமை தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடத்தில் வினவினேன். அது சிறந்ததொரு ஆரம்பமாகும்.
விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனால் ஹெக்டயாருக்கு 7 – 8 டொன்கள் வரையிலான உற்பத்தித் திறன் கிட்டும். அவுஸ்திரேலியா ஒரு ஹெக்டெயாரில் 10 டொன் நெல் உற்பத்தியை செய்கிறது. எமது நாட்டின் ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் 11 மெற்றிக் டொன் நெல் விளைச்சல் பெறப்படுகின்றன.
அதேபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே நான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். பௌத்த மத தலங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் குருந்தி விகாரையின் பிரச்சினையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். அது தொடர்பில் வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அதனால் நாம் வெளியிலிருந்து அந்த பிரதேசத்திற்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. அது தொடர்பிலான விடயங்களை கண்டறியுமாறு தொல்பொருளிலியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மகா விகாரையில் அகழ்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளோம். வடக்கில் இடம்பெறும் அகழ்வுகளின் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுப்போம்.
முன்னைய அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அகழ்வுகளை துரிப்படுத்தியதாக கூறினீர்கள். இருப்பினும் அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. தொல்பொருள் திணைக்களம் வழங்கும் தீர்மானத்திற்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தப் பகுதிகளை பாதுகாக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் முதலில் தொல்பொருளிலியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம்.
இருப்பினும் வெளியிலிருந்து வருவோர் அப்பகுதிகளுக்குள் பிரச்சினைகளை தோற்றுவிக்க நாம் இடமளியோம். அதற்காக மாகாண மதத் தலைவர்கள் குழுவொன்றை நியமித்து பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் எதிர்பார்த்துள்ளோம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது.
அதேபோல் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்திற்கமைவான சட்டமூலமொன்று 20 வருடங்களின் முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் உள்ளடக்கங்களை நாம் மாற்றியமைத்தோம். ஒவ்வொரு மாகாணங்களிலிருந்தும் ஒருவர் என்ற அடிப்படையில், 09 பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பதவிகளை வகிக்கும் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், காணி பயன்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றை தயாரிக்க வேண்டும். காணி பயன்பாடு தொடர்பிலான இணக்கபாட்டினையும் எட்ட வேண்டும். காணி தொடர்பிலான மறுசீரமைப்புக்கள் எவையும் மேற்கொள்ளப்படாது என்பதோடு, காணிச் சட்டம் தொடர்பில் தேசிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும். அதனை செயற்படுத்தும் பணிகள் மாகாண சபைகளிடத்தில் ஒப்படைக்கப்படும். தேசிய காணி ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும்.” என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.