வங்குரோத்து நிலையை அறிவித்த வழங்குநர் சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?

அங்கொட தேசிய மனநல நிறுவனத்தினால் மேலதிகமாக செலுத்தப்பட்ட பணத்தை, வங்குரோத்து நிலையைக் கூறி மீளச் செலுத்த மறுத்த உணவு வழங்குநர், சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவில் புலப்பட்டது.

கொள்வனவுக் குழுவின் தீர்மானங்களை முறையாக உடன்படிக்கை நிபந்தனைகளில் சேர்த்துக்கொள்ளாமை காரணமாக சம்பந்தப்பட்ட வழங்குநரிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வது சிக்கலாகியுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வங்குரோத்து நிலையை அறிவித்த வழங்குநர் ஒருவர் சுகாதார அமைச்சின் மற்றுமொரு நிறுவனத்தின் வழங்குநராக செயற்படுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என உபகுழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நிலுவைத் தொகையை செலுத்தாத வழங்குநரைத் தொடர்ந்தும் பாதுகாக்காமல், அவர்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை அறவிடுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உப குழு அறிவுறுத்தியது.

வைத்தியசாலை முகாமைத்துவம் மற்றும் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வு விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் உப குழு 2023.11.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை இயந்திரங்கள் ஊடாக பணியாளர்களின் வருகை மற்றும் வெளியேறலை உறுதிப்படுத்துவது தொடர்பான 2017 ஆம் ஆண்டு பொது நிர்வாகச் சுற்றறிக்கைக்கு அமைய 31.08 மில்லியன் ரூபா செலவில் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து உபகுழு கேள்வி எழுப்பியது. சுகாதாரப் பணியாளர்கள் கைரேகை வைத்து சேவைக்கு வருவதை எந்தக் காரணத்துக்காக மறுக்கிறார்கள் என குழுவின் தலைவர் இதன்போது வினவினார். இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், பணியாளர்களின் எதிர்ப்பினால் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், சுகாதார அமைச்சின் வளாகத்தில் விரைவில் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பொதுவான முறைமை ஊடாக அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும் ஊழல் அற்ற சேவையாகவும் மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையும் இணைந்து கொள்ள வேண்டுமென குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளின் உரிமைப் பத்திரங்கள், நிள அளவைத் திட்டங்கள், மதிப்பீடுகள் என்பவற்றிலுள்ள சிக்கல்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பாகவும் உபகுழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. இதன்போது அந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஆயத்தமின்றி குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் உப குழுவின் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ முதிதா பிரஷாந்தி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.