வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி சலுகைகளை பெற்றுக்கொள்ளுமாறு அஸ்வெசும பயனாளிகளுக்கு அறிவிப்பு


06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்பிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் கணக்குகளை ஆரம்பிக்க வாய்ப்பு.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக 156,261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை உள்ளிட்ட உரிய தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமூக நலன்புரி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அஸ்வெசும பயனாளிகளுக்காக கடந்த ஜூலை மாதத்தில் 05 கட்டங்களின் கீழ் ஒக்டோபர் 16 ஆம் திகதி 1,230,097 குடும்பங்களுக்கு 7,705,302,250.00 தொகையிலான நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்தில் பகிர்ந்தளிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

மேன்முறையீடு மற்றும எதிர்ப்புகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதன் காரணமாக பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இதன்போது தெரியவந்ததோடு, அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு விரைவில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மேலும், 2 இலட்சம் பயனாளிகள் இதுவரையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காததன் காரணமாகவே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் இல்லை என்றும் ஜயந்த விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரதேச சபையினால் அஸ்வெசும கணனிக் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் அஸவெசும பயனாளிகள் தங்களுக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதன் பின்னர் வங்கியினால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை இல்லாததன் காரணமாக வங்கிக் கணக்குகளை திறக்காதிருப்பவர்களுக்கு 06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்குகளை திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அஸ்வெசும வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வலுவான பிரிவொன்றை நடத்திச் செல்லவேண்டியதன் அவசியம் மேற்படி சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதோடு, டிசம்பர் மாதமளவில் கொடுப்பனவுகளை முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ள நிலையில் விசேட வேலை வாரம் ஒன்றை அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா வீரசிங்க, பிரமரின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) கே.பீ.ஹர்ஷ விஜேவர்தன, சிறுவர் மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் (சமூக வலுவூட்டல்) சம்பிக்க கலுஆரச்சி, தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.அனோமா நந்தினி, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (சமூக உட்கட்டமைப்பு வசதிகள்) ஜே.எம்.எஸ்.டீ.ரத்நாயக்க, ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீ.பிரதீப் சபுதந்திரி, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (கிராம அதிகாரி நிர்வாகம்) டீ.டீ.சி அதுகோரல மற்றும் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பிரதேச நிர்வாகம்) டபிள்யூ.பீ.சீ.ஏ. வீரசூரிய ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் நிறைவேற்று அதிகாரிகள், நலன்புரி நன்மைகள் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன