நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் அடுத்த வருடத்திலிருந்து இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்வதில் காணப்படும் சிக்கலான நிலைமைகள் நீங்கும் என்றும் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது அனுமதியைப் பெறுவது போன்ற பல்வேறு விடயங்களில் சிக்கலான நிலைமைகள் காணப்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் உத்தேச முதலீட்டுச் சட்டம் பற்றிக் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக உலக வர்த்தக மையத்தின் 27வது தளத்தில் முதலீட்டாளர் வசதி மையத்தை (Investor Facilitation Center) தொடங்கியுள்ளதாகவும், இது அனைத்து அரசாங்க நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்புடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார். இதில் முதலீட்டாளர்கள் தமக்குக் காணப்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. புதிய சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும்வரை தற்காலிக ஏற்பாடாக இது இருக்கும் என்றார்.
அத்துடன், இலங்கைக்கு முதலீடுகளைக் கொண்டுவரக்கூடிய புதிய சுற்றுலா வலயங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும், அவற்றை ஊக்குவித்து புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பில் சரியான தகவல்கள் முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து குழுவில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெறும் கலந்துரையாடல்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான தேவையை வலியுறுத்த உண்மையான தகவல்கள் முன்வைக்கப்படுவது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சரான கௌரவ சாந்த பண்டார, கௌரவ அஷோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ யாதாமினி குணவர்தன, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ தம்மிக பெரேரா, கௌரவ கருணாதாச கொடித்துவக்கு, கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ குணபால ரத்னசேகர, கௌரவ வேலு குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.