பிரிக்ஸ் நாடுகளுடன் செயற்படுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்துக் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்கவும்

பிரிக்ஸ் நாடுகளிலேயே உலக சனத்தொகையில் 41 வீதமானவர்கள் வாழ்வதுடன், உலகின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 24%, சகல உலக சந்தை செயற்பாடுகளில் 16% செயற்பாடுகள் இடம்பெறுவதாக சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதியில் 10.3 வீதமும், இறக்குமதியில் 47.3 வீதமும் பிரிக்ஸ் நாடுகளுடனேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து செயற்படுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பயனுள்ளதாக அமையும் என மத்திய வங்கியின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) நாடுகளுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் இந்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய பொருளாதார, சமூக, அரசியல் நன்மைகள் யாவை என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 05ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.

இதற்கமைய பிரிக்ஸ் நாடுகளுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் இந்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய பொருளாதார, சமூக, அரசியல் நன்மைகள் குறித்து ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியன கலந்துரையாடலை நடத்தி அது பற்றிய அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் காணப்படும் வெற்றிடங்களில் அந்தந்த நாடுகளில் கல்வி கற்கும் எமது நாட்டு மாணவர்களைத் தன்னார்வத் தொண்டர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான  கௌரவ (பேராசிரியர்) ஜி. எல். பீரிஸ், கௌரவ அகில எல்லாவல, கௌரவ மதுர விதானகே ஆகியோரும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ சந்திம வீரக்கொடியும் கலந்துகொண்டனர். இது தவிரவும், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளும் குழுவில் ஆஜராகியிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன