பாராளுமன்ற செயற்பாட்டில் பிரஜைகளை செயலூக்கத்துடன் ஈடுபடுத்தும் திறந்த பாராளுமன்ற முறை குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் 12.10.2023 அன்று இடம்பெற்றது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம், பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தச் செயலமர்வில் அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்றம் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்ட சட்டவாக்க செயற்பாடுகளில் பொதுமக்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் மேலும் விரிவடையும் என பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார். துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் ஊடாக பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்ட இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் மிக முக்கியமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படாமையால் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்சி பேதமின்றி பொது மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியானது எனவும், அது பாரிய வெற்றியாகும் எனவும் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மயந்த திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார். 13 சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர் விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டங்களுடனும் திறந்த பாராளுமன்ற முறைமையுடனும் மக்கள் கைகோர்த்து வருவதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, ஜனநாயகத்தை பாதுகாத்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தினார்.
இந்த ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி கருத்துத் தெரிவிக்கும் போது, தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு ஆட்சியைக் கையளித்துவிட்டு காத்திருக்காமல் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். இந்தியா போன்ற நாடு அதற்குச் சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், எட்டாவது பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியத்தினால் தற்பொழுது மிகவும் பரந்த அளவில் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பில் கௌரவ மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட அங்கத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க குறிப்பிடுகையில், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து இந்த சவால்களை வெற்றிகொள்ளும் பாரிய பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சட்டவாக்கச் செயற்பாட்டில் பொதுமக்களை ஈடுபடுத்தும் திறந்த பாராளுமன்றக் எண்ணக்கருவை வலுப்படுத்துவதற்கு தற்போதைய துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபித்திருப்பது மிகவும் முக்கியமான நடவடிக்கை எனத் தெரிவித்தார். அந்த 17 குழுக்களில் 8 குழுக்களின் தலைவர்கள் எதிர்கட்சியையும் 9 குழுக்கள் ஆளும் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுகின்றமை ஜனநாயக வழிமுறையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தக் குழுக்களில் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிலையியற் கட்டளைகளுக்கு அமைய எந்தவொரு சட்டமூலமும் இரண்டாம் மதிப்பீடுக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட முன்னர் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டு பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என்பதால் திறந்த அடிப்படையில் சட்டவாக்க நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாக பதில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அமைச்சர் குழுவின் உறுப்பினர் ஒருவராக இல்லை என்பதால் சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை தேவைகள் மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை குழுவுக்கு முன்வைக்கும் முழுமையான பொறுப்பு அரச அதிகாரிகளுக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரச அதிகாரிகள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் காணப்படின், எதிர்காலத்தில் அந்த நிலைமையை தீர்ப்பதற்கு தலையிடுவதாகவும் அவர் தெரிவித்தார்
அத்துடன், திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவில் பொது மக்களின் பிரவேசத்தை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
அதனையடுத்து, திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்வது தொடர்பில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்திடம் காணப்படும் பொறுப்புக்கள் மாற்று சவால்கள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் அதன் அங்கத்தவர்களான, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டிலான் பெரேரா, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் கௌரவ வீரசுமான வீரசிங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.