நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் அடைகாக்கும் தாய் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டை Hatching Eggs களை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வாரத்திற்கு இந்த 44,000 முட்டைகள் ஒரு மாத காலத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபைத் தலைவர் பேராசிரியர் எச். டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (08) காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
அடைகாக்கும் கோழிகளை இறக்குமதி செய்வதால் முட்டை மற்றும் குஞ்சுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பாதுகாக்கப்பட்ட முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒரு மாத குறுகிய காலப்பகுதிக்குள் முட்டை மற்றும் இறைச்சிக்கான கோழிகளை பெற்றுக்கொள்வது இலகுவாக அமையும் என்பதால், இவ்வாறு சேமிக்கப்படும் முட்டைகளை இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.