அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனற்ற தன்மையை தவிர்ப்பது மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனற்ற தன்மையை தவிர்ப்பது மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் அண்மையில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
மக்களுடன் நேரடியாகத் தொடர்புபடும் முக்கியமான அரசாங்க நிறுவனங்களின் வகிபாகத்தை மறுசீரமைப்புச் செய்வது, பலதரப்பட்ட பொதுப் பிரச்சினைகள், தேவைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யவும், அவற்றை வழிநடத்தவும் கண்காணிக்கவும் ஒரு திட்டத்தை உருவாக்குவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன, முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் காமினி காரியவசம், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுனில் எதிரிசிங்க, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, திறன் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் சந்தியா விஜயபண்டார, முன்னாள் அமைச்சின் செயலாளர் சிறிபால விர்த்தமுல்ல, முன்னாள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிங்ஹ, முன்னாள் மாவட்ட ஆணையாளர் சுனில் கண்ணங்கர ஆகியோர் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனற்ற தன்மையை தவிர்ப்பது மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. பிரதேச ரீதியாக கிராமத் தலைவர்கள் அதாவது விகாராதிபதிகள் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், கிராம சேவகர், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட ஏனைய பிரதேச ரீதியாக உள்ள தலைவர்கள், பொலிஸ் ஆகியோரை உள்ளடக்கியதாக அமைப்பொன்றை உருவாக்கி பிரதேச ரீதியாகக் காணப்படும் பிரச்சினைகளைக் கலந்துரையாடவும், அவை தொடர்பான தீர்வுகளைக் கண்டுபிடிப்பது அவசியமானது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2019ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட கிராமப் பாதுகாப்புத் திட்டம் குறித்த கருத்துக்கள் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், தற்பொழுது அது செயலிழந்து விட்டதால், அந்தத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவிடம் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். மேலும், நிர்வாகம் தொடர்பில் சட்ட விதிகள் காணப்பட்டாலும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை பிரச்சினைக்குரியது என்றும், இது தொடர்பான நடைமுறையை உரிய முறையில் பேணுவதற்கு கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் நிபுணர்கள் குழு இங்கு சுட்டிக்காட்டியது.
அத்துடன், அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புடைய பல்வேறு செயல்முறைகளுக்காக வடிவமைக்கப்பட்ட முறையான அமைப்புகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதும் புதுப்பிப்பதும் அந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவைப் பேணுவதற்கும் முக்கியமானவை என இங்கு தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களை பரவலாக்குவது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சமாளிக்க முடியும் என்றும், பொது நிறுவனங்களுக்கான சரியான தேசிய கொள்கையை ஸ்தாபிப்பதும், நடைமுறையில் அதன் நல்ல செயல்பாடு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அரசாங்கமொன்றுக்கு முக்கியம் என்றும் நிபுணர்கள் குழு மேலும் கூறியது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ மர்ஜான் ஃபலீல், கௌரவ மயந்த திஸாநாயக்க, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.