“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
“நீர்க் கட்டணம் தொடர்பில் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நீர்க் கட்டணம் இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது. கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும்கூட, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துபவர்களுக்கும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின் கட்டண அதிகரிப்பு உட்பட குடிநீர் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பும் கடந்த காலங்களில் நீர்க் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியது. அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“நாம் 200” என்ற நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல்வேறு அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தியாவில் இருந்தும் அதிதிகள் வருகை தரவுள்ளனர். மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதற்கே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாம் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். நாளை அமைச்சரவை உப குழு கூடவுள்ளது. இது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும். இந்த உப குழுவில் எடுக்கப்படும் முடிவின் பிரகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதி இது குறித்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம் காணி உரிமை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும்.
அதேபோன்று, இதுவரை மலையக மக்களின் மேம்பாட்டுக்காக வரவு செலவுத்திட்டத்தில் 3000 மில்லியன்களே ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் சுமார் 2000-2500 மில்லியன்கள் வீட்டுத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் இந்த வீட்டுத்திட்டங்கள் இலவசமாக மக்களுக்கு கையளிக்கப்படுவதில்லை. இவ்வாறு அமைச்சின் ஊடாக வழங்கப்படும் வீடுகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகையில் 50 % சதவீதத்தை குறித்த மக்கள் அரசாங்கத்துக்கு திருப்பி வழங்கவேண்டியுள்ளது. ஏற்கனவே வறுமையில் இருக்கும் மக்களால் இவ்வாறு வழங்குவது சாத்தியமற்றதாகவே உள்ளது. எனவே எஞ்சிய சுமார் 500 மில்லியன்களை வைத்து மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் கூட இது ஒரு சமூக ரீதியிலான பிரச்சினையாக இருப்பதால், இந்த முறை வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு 15,000 மில்லியன்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். இது ஐந்து மடங்கு அதிகரிப்பாகும். எனவே இவ்வாறு கிடைக்கவிருக்கும் நிதியை முறையாக திட்டமிட்டு சரியான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவோமாயின் நான் இந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் இந்த நிதி இந்த சமூகத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பல்கலைக்கழகம் தொடர்பிலும் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். இந்திய அரசாங்கம் ஏற்கனவே எமக்கு 3000 மில்லியன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாம் வெறுமனே கண்துடைப்புக்காக செய்யப்படும் மாற்றங்களுக்குப் பதிலாக, நிரந்தர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக அமைச்சின் ஊடாக ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயற்குழுவில் அரசியல்வாதிகள் எவரும் அங்கம் வகிக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். மலையகத்தை சேர்ந்த புத்திஜீவிகள் உட்பட பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களால் வழங்கப்படும் திட்ட வரைவு எமக்கு கிடைத்தவுடன் அதனை இந்திய அரசாங்கத்துக்கு வழங்குவோம். அதேநேரம் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அதனை வழங்கவுள்ளோம். அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்று அதனை நடைமுறைத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் கல்வி அமைச்சினாலே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், நான் கல்வி அமைச்சருடனும் இது குறித்து கலந்துரையாடியுள்ளேன். அவர் இந்த விடயத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தோட்டத் தொழிலாளர் தொடர்பில் நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். அது மிக முக்கியமானது. அது ஒரு பொறிமுறை ஆகும்.
அதேபோன்று இந்திய வீட்டுத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முன்னர் தோட்டத்தில் தொழில் செய்தால் தான் வீடு என்று இருந்த நிலையை மாற்றி தோட்டத்தில் பிறந்தால் வீடு என்ற விடயத்தைக் கொண்டுவந்துள்ளோம். அடுத்தது, கடந்த காலங்களில் வீட்டுத்திட்டங்கள் வரும்போது குறித்த சில எண்ணிக்கையிலான காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் நாம் இம்முறை ஒரே தடவையில் மொத்தமாக 1785 காணிகளை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளோம். இதில் முதல் கட்டமாக சுமார் 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக அமைச்சரவை மூலம் ஒரு குழுவை நியமிக்கவுள்ளோம். அதில் எனது அமைச்சின் செயலாளர் உட்பட மின்சாரம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு அமைச்சுகளின் முக்கியமான அதிகாரிகள் அங்கம் வகிக்கவுள்ளனர். இந்த வீட்டுத்திட்டம் அவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறு செயற்படுத்தப்படும்போது மக்களுக்கு சகல வசதிகளும் ஒரே நேரத்தில் கிடைக்கும். எனவே இவ்விடயம் தொடர்பில் பொறிமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.” என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.