தேசிய விளையாட்டு சபை மூலம் விளையாட்டுத் துறையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகள் கிடைத்துள்ளன

விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.

தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்து, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை அடையாளங் கண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இளைஞர்கள் தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகளை பிரதேச ரீதியில் செயற்படுத்த ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், தேசிய இளைஞர் படையணி ஊடாகவும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், முக்கியமாக இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதுடன் அவர்களுக்கு திறன்விருத்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள், சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொடுத்தல் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் மத்திய அரசுக்கும் மாகாண விளையாட்டுத் துறைக்கும் இடையில் நிலவக்கூடிய முரண்பாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மத்திய, மாகாண என்ற வேறுபாடுகள் இன்றி எல்லோரும் ஒன்றிணைந்து இந்நாட்டு விளையாட்டுத் துறையின் மேப்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும்போது இதுவரை பல்வேறு பிரச்சினைகள் தோன்றியதாவும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக தற்போது தேசிய விளையாட்டு சபை நிறுவப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், அதன் உறுப்பினர்களாக தற்போது, இந்நாட்டுக்காக சர்வதேச அளவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய முன்னாள் விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதேச ரீதியில் இயங்கும் ஒரு சில விளையாட்டுக் கழகங்கள் பெயரளவில் ஆவணங்களுக்கு மட்டுப்பட்டு இருப்பதாகச் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அவ்வாறின்றி உண்மையில் குறித்த பிரதேசங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய கழகங்களை நிறுவி இந்நாட்டு விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என அவர் விளையாட்டுக் கழகங்களைக் கேட்டுக்கொண்டார்.

பாடசாலை மற்றும் பிரதேச மட்டத்தில் திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவும் மற்றும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெறுவதற்கான புலமைப்பரிசில்களை வழங்கப் போதியளவு நிதியின்மை, தற்போது விளையாட்டு அமைச்சு எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இருந்தபோதும் தற்கால பொருளாதார நெருக்கடியிலும் கூட இயன்றளவில் அவ்வாறான வாய்ப்புகளை இந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்ற வகையில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தாய் நாட்டுக்கு வருகை தரும் விளையாட்டு வீரர்களை விமான நிலையம் வரை சென்று பாராட்டி வரவேற்பது போல், போட்டிகளில் தோல்வி அடைபவர்களுக்கும் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையினரும் பிரதேச தரத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்காக தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர், இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் குறுகிய காலத்தில் இந்நாட்டு விளையாட்டுத்துறையை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மிக முக்கிய விடயமாக, விளையாட்டுப் பல்கலைக்கழகமொன்றை எமது நாட்டில் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம், வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு தொடர்பான அறிவு மற்றும் பயிற்சி உட்பட விளையாட்டுத் துறையுடன் தொடர்பான அனைத்து வகையான தெளிவுகளையும் முழுமையாக வழங்க முடிவதுடன் இந்நாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன