தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கருத்துக்களை பார்க்கின்ற போது இதில் முக்கிய நபர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கிறது?
ஒருவர் நியாயமான தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையிலே இனவாதமாகவும்,அவர் ஒரு தமிழராகவும் பார்க்கப்படுகின்ற நிலை காரணமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித்தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையை பார்க்கும் போது தமிழ் நீதிபதிகளுக்கு அவர்கள் நியாயமாக செயல்படுகின்ற வாய்ப்பை தடுக்கின்ற அச்சுறுத்துகின்ற ஒரு செயல்பாடாக தான் இந்த நீதிபதியின் ராஜினாமா செய்தி கூறுகிறது.
நீதியமைச்சர் இந்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;.
எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப் பட்டிருக்கின்ற இந்த சவாலை முறியடிப்போம்..
புத்த பிக்குகள் நீதித்துறையை மதிப்பதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது..
இதில் குறுந்தூர் மலை தீர்ப்பு என்பது பல அழுத்தங்களை கொடுக்கும் வகையில் நீதிபதி அவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனவே நீதிபதிக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கின்ற அளவிற்கு மிக மோசமான அச்சுறுத்தல் இருந்ததினால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய நீதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.