“ஜயகமு  ஸ்ரீ   லங்கா” வேலைத்திட்டம்  நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஜயகமு  ஸ்ரீ   லங்கா Jayagamu Sri Lanka  என்ற நாடு தழுவிய நடமாடும் பொது மக்களுக்கானசேவை நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நாளை (31) அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த வேலைத்திட்ட நிழ்வுகள்  நாளை (31ஆம் திகதி)யும் நாளை மறுதினமும் (01ஆம் திகதி) அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளில்  வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கான  தொழில்சார் பயிற்சி வாய்ப்புகள் குறித்து  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளக்க நிகழ்வுகள்  தொழிலாளர்களின் தொழில் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான விசேட சேவைகளும் இடம்பெறவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால்  புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்துவதற்கான  விசேட வழிகாட்டல் வேலைத்திட்டம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள்  மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, சிரமவாசனா  நிதியத்தின் கீழ், குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன