தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டிரம்ப், 2020இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து திருடிக்கொண்டதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6ஆம் திகதி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை கொலம்பியா நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது. இந்நிலையில், தங்கள் மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நீதிமன்றத்தில் சரணடைவதாக கூறியிருந்தார். அந்தவகையில், அமெரிக்க நேரப்படி 24ஆம் தேதி இரவு, அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அப்போது சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின் அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டு சென்றார்.