சுகாதார அமைச்சில் தகவல் முகாமைத்துவத்துக்கு பல கட்டமைப்புகள் இருப்பது பணத்தை வீணடிப்பதற்கா?

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்புகள் பற்றிய முறையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட உப குழுவினால் மொறட்டுவை பல்கலைக்கழகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் இந்த உப குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பான கணக்காய்வு விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சிலர் உப குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவத்திற்குப் பெருமளவான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்நாட்டில் சுகாதார துறையைக் கட்டியெழுப்புவதில் அவற்றினூடாக முறையான ஒருங்கிணைப்பு காணப்படுகின்றதா என்ற பிரச்சினை காணப்படுவதாகக் கணக்காய்வாளர் நாயக அலுவலக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை சரியான முறையில் நிர்வகிப்பதற்கு அபிவிருத்தி செய்யப்படும் இந்தத் தகவல் கட்டமைப்பு மூலம் இடம் கிடைக்கும் எனச் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் உள்ளவர்களின் சுகாதாரப் பதிவுகள் வெவ்வேறு இடங்களில் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்புகள் ஊடாக பொதுமக்களின் சுகாதாரப் பதிவுகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய தகவல் முகாமைத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மருந்துகளை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட “ஸ்வஸ்த” தகவல் முகாமைத்துவக் கட்டமைப்புகளின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான விடயங்களை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உப குழுவின் முன் சமர்பித்தனர்.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 723 வைத்தியசாலைகளில் இந்தக் கட்டமைப்பு நிறுவப்பட்டு இயங்கி வருவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 436 வைத்தியசாலைகளில் இந்த கட்டமைப்பை நிறுவ உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

“ஸ்வஸ்த” தகவல் முகாமைத்துவக் கட்டமைப்பை பூர்த்தி செய்து முடிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்கள் பற்றிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறும், பல கட்டங்களில் இந்த அமைப்பை பூரணப்படுத்தத் தேவையான காலக்கெடுவை தயாரிக்குமாறும் இதன்போது உப குழுவின் தலைவர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்பை மிகவும் திறம்படப் பேணுவதற்கு, அதற்காக பிரத்தியேகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட திணைக்களமொன்று இருக்க வேண்டியதன் தேவை வலுவாக இருப்பது குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, உலகில் அபிவிருத்தியடைந்த சுகாதாரக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில் உள்ள சுகாதாரத் தகவல் முகாமைத்துவக் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, இன்னும் பல ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்தித்து முறையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு உபகுழுவின் தலைவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன