சமுதாயஞ்சார் அமைப்புகள் ஊடாக இடம்பெறும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்

சமுதாயஞ்சார் அமைப்புகள் தொடர்பான தேவையான தகவல்களைப் பெற்று ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியது.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 2019/2020/2021 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழும (கோபா) இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

சமுதாயஞ்சார் அமைப்புகள் கிராமிய அளவில் செயற்படுவதன் ஏதாவதொரு வகையில் ஒழுங்குபடுத்தல் தேவை என கோபா குழு சுட்டிக்காட்டியது. இதனால் இந்த சமுதாயஞ்சார் அமைப்புகள் ஊடாக இடம்பெறும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், சமுதாயஞ்சார் நீர் அறக்கட்டளை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைக்கு அமைய திட்டமிட்டபடி நீர்த் திட்டங்களை நிறைவு செய்வதில்லை எனக் கணக்காய்வாளர் திணைக்களம் இதன்போது தெரிவித்தது. இந்தத் திட்டங்கள் கட்டம் கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட 123 நீர்த் திட்டங்களில் 2022 டிசம்பர் வரை 119 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் சரியானதாக இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் பணிகள் இது வரை செயற்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய, செப்டம்பர் 22 க்கு முன்னர் இது தொடர்பான தெளிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையை கோபா குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பரிந்துரைத்தார். அத்துடன், கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளிலுள்ள தகவல்கள் சரியானதாக இல்லை எனத் தெரிவிப்பதாயின் அவற்றை சவாலுக்குட்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அது தொடர்பான விபரங்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்குமாறும் கோபா குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், செயலற்ற சமுதாயஞ்சார் அமைப்புகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்தத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 5383 சமுதாயஞ்சார் அமைப்புகளில் 2023 ஜூன் 30 வரை 234 அமைப்புகள் செயலாற்றுக் காணப்படுவதாக கோபா குழு சுட்டிக்காட்டியது. இந்த செயலற்ற அமைப்புகளில் 19 அமைப்புகளை செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்த சமுதாயஞ்சார் அமைப்புகள் செயலற்றுப் போவதற்கு நீர் மூலங்கள் வற்றிப்போதல் உள்ளிட்ட 4 காரணங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பூர்த்திசெய்யப்படாத வேலைகள் மற்றும் ஏல ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்களுக்கு மாறாக மேற்கொண்ட விடயங்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட விதம் தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நவம்பர் 8 ஆம் திகதி இந்தத் திணைக்களத்தை மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதாகவும், அதன்போது 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த திணைக்களத்துடன் தொடர்புபட்டு செயற்படும் அதிகாரிகள் Zoom தொழிநுட்பத்தினூடாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ நிரோஷான் பெரேரா, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன