ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது 2023.04.25 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதன் முன்னேற்றம் குறித்த மீளாய்வு செய்வதற்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அண்மையில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் இடம்பெற்ற கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இலங்கை சமுர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றும் போது இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களை உள்ளீர்ப்பு செய்த முறை, இதுவரை உள்ளீர்ப்பு செய்யப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அது தாமதமடைவதற்கான காரணம், பதவி உயர்வுகள் என்பவற்றைப் பகுப்பாய்வு செய்து விரைவாகத் தீர்ப்பதற்கான பொறிமுறையைத் தயாரிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அதற்கமைய, 2023 ஏப்ரல் 30 வரை 22,646 மொத்தப் பணியாளர்களில், 17,512 பேர் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை உள்ளீர்ப்பது தாமதமடைவதால் 3,027 அதிகாரிகளுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என்பது சிக்கலாக உள்ளது என்றும் 2015 இல் அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இந்த அதிகாரிகளின் நியமனம் மற்றும் ஒழுங்குமுறைப் பொறுப்பாளர் சமுர்த்தி பணிப்பாளர் நாயகமாக கருதியமையால் இந்த அனுமதிகளை பொதுச் சேவை ஆணைக்குழுவா அல்லது முகாமைத்துவ சேவைகள் திணைக்களமா மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த அதிகாரிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வுகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் பரிந்துரையுடன் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது.
இந்த பிரச்சினையைத் தீர்த்து மொத்தப் பணியாளர்களில் சிக்கல்கள் காணப்படும் பணியாளர்கள் தொடர்பில் தெளிவான வகைப்படுத்தலை மேற்கொண்டு தீர்வுக்கான பொறிமுறையொன்றை ஜூலை 6 ஆம் திகதிக்குள் வழங்குமாறு குழுவின் தலைவர் பணிபுரை வழங்கினார்.
அத்துடன், பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பல்வேறு அரசியல் விடயங்கள் காரணமாக இந்தத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் சில தெளிவின்மை உருவாகியுள்ளதால், விரைவாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வினைத்திறனான சேவையை வழங்குவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
சமுர்த்தி வங்கிக் கட்டமைப்பை கணினிமயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வேலைத்திட்டம் தற்பொழுது 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் டிசம்பர் மாதமளவில் அதனை நிறைவு செய்யமுடியும் எனவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதேபோன்று, எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை சமுர்த்தி வங்கிக் கட்டமைப்பின் ஊடாக செயற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தமன பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி வலைகளை வழங்குவதில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனுடன் சம்பந்தப்பட்ட சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் பொது நிர்வாக அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக கோபா குழுவின் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கிகள் கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வுக்கு கொண்டுவரப்படாமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் சட்டமா அதிபரிடமும் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி இரண்டு கருத்துக்கள் நிலவுவதாகவும் இதன்போது தெரியவந்தது. சமுர்த்தி வங்கிகள் சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் உள்ளதால் அவை கணக்காய்வுக்கு ஏற்றது என கணக்காய்வாளர் நாயகம் மற்றும் குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய, இது தொடர்பில் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தத் திணைக்களத்தை மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மனோ கணேசன், கௌரவ டி. வீரசிங்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராறச்சி ஆகியோர் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
072 366 9163