கொரியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் மிகவும் பாராட்டுக்குரியது – பிரதமர்

பல துறைகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் தென்கொரியா தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி லீ ஜின்போக் மற்றும் கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஜூன் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திலும் பூசான் நகரசபை பணிப்பாளர் நாயகம் யூ ஜங் சோவை  (  07) அலரி மாளிகையிலும் சந்தித்த போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரிய குடியரசு மற்றும் அதன் நன்கொடை நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி மன்றங்கள் இலங்கைக்கு உதவ பல நலன்புரி நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றன. கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நட்புறவும் இருதரப்பு உறவுகளும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதாகவும், கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார உறவுகள் உட்பட இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உயர் மட்டத்தில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முதலீடு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை கொரியா அதிகரிக்கும் என கொரிய ஜனாதிபதியின் சிரேஷ்ட செயலாளர் (அரசியல் விவகாரங்கள்) விசேட பிரதிநிதி லீ ஜின் பொக் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேலும் ஆதரவு வழங்கப்படும் என்று கூறிய அவர், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையங்களுக்கு கொரிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் கற்பித்தல் வசதிகளை விரிவுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

கொரிய அபிவிருத்தி மாதிரி மற்றும் கொரியாவின் மனித வள திறன் விருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் கொரியாவில் பயிற்சிகளைப் பெற்ற இலங்கை அரச அதிகாரிகள் மிகவும் கவரப்பட்டுள்ளதாகவும், அவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

விவசாய இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்பிடி போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு கொரியாவுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

ஏற்றுமதி செய்யக்கூடிய மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு இலைகளில் இருந்து சாறுகளை பெற்றுக்கொள்வது போன்ற ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணத்துவத்தை கொரியாவுக்கு வழங்க முடியும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

EXPO 2030 கண்காட்சியை பூசானில் நடத்துவதற்கான திட்டம் மற்றும் அதன் ஏற்பாடுகள் குறித்தும் கொரிய பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

கொரியாவில் உள்ள  ஸ்ரீலங்காராம விஜிதவங்ச தேரர், கொரிய பாராளுமன்ற உறுப்பினர்களான சங்கும் யூ, வூக் லீ, ஹுன்சுங் லீ, பிவான் கான், இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, அசோக பிரியந்த, சிசிர ஜயகொடி, ஜனக வக்கும்புர, தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன் தெனிபிட்டிய, யதாமினி குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன