ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்று முன்தினமும் (17) நேற்றும் (18) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 131 பேர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன் பிரதமர் பெத்தும் ரணசிங்க ஐந்தாவது பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஆரம்பிக்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.
நேற்றும் இன்றும் இடம்பெற்ற அமர்வுகளின் போது உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இளைஞர் பாராளுமன்ற மூன்றாவது அமர்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க,
1960 களில் உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மை நிலை காணப்பட்டது. அதன் பலன்கள் எமது நாட்டிற்கும் கிடைத்தன. 1967 களில் அமைச்சராகவிருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவினால், இந்த அமைதியின்மை நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சட்டங்களை தயாரிக்கும் அதேநேரம் அதிலிருந்து விடுபடுவதற்கான பரிந்துரைகளையும் முன்மொழிந்தார். குறிப்பாக இளைஞர்களை இதிலிருந்து விடுவிப்பதும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதுமே அவரது நோக்கமாக காணப்பட்டது.
அதற்காக 1967 இல் இஸ்ரேல் நிபுணரான பிரிகேடியர் ஆர்யல் லெவில் இலங்கையின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையில் இளைஞர்களின் அறிவு மற்றும் தொழில்வாண்மையை தேசிய அபிவிருத்திக்கு எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பிலான விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.இளைஞர்களின் அதிருப்தியை போக்குவதற்கும் இளைஞர்களின் அறிவு மற்றும் இளைஞர் உழைப்பை இலங்கையில் தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக மாற்றுவதற்கும் இது அடித்தளமாக அமைந்தது.
இது தொடர்பாக, 1967ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டமூலத்தை அப்போதைய அமைச்சராக இருந்த ஜெ. ஆர். ஜயவர்தனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாம் அனைவரும் அறிந்த அந்த சபையில் தான் இன்று நாம் கூடியிருக்கிறோம் .
அந்தச் சட்டம் இளைஞர் ஆற்றலை தேசிய வளர்ச்சிக்கு வழிநடத்த முன்மொழியப்பட்ட தொண்டர் இளைஞர் சேவைச் சட்டம் ஆகும். அதன்படி, இந்த சட்டமூலம் இந்த இடத்தில் ஆராயப்பட்ட சட்டமூலமாகும்.
இச்சட்டத்தை அமுல்படுத்த 1977ல் ஆட்சிக்கு வந்த ஜெ. ஆர். ஜயவர்தன, அன்றிருந்த இளம் அமைச்சரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்திருந்தார். அவர் அப்போது இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில், இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக அவர் கிராமத்தை நிர்வகிக்க, கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை விஸ்தரித்து ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாகாணத்திலும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து தலைவர்கள் உருவாக வேண்டும்.எதிர்கால சமுதாயத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மையமாக இருக்கக்கூடிய இளைஞர் தலைவர்கள் இந்த அபிவிருத்தி மையத்தின் மூலம் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் புதிய பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, 1979 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார்.
நீங்கள் மஹரகம இளைஞர் சேவை மன்றத்தின் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டிருந்தால், அந்த நடவடிக்கைகள் அனைத்தும் 1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் அப்போதைய இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் தான் அதற்குக் காரணம்.
இது இத்துடன் நின்று விடாது அவர் இந்தச் சட்டத்தை செயற்படுத்தி , ஜப்பானிய மக்களின் உதவியுடன் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்று வரை 1985 ஆம் ஆண்டு யொவுன் புரய ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் படிப்படியாக மாறி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதான மண்டபத்தில் சபாநாயகர் ஒருவரை உள்ளடக்கிய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி முன்மொழிவுள் ஆராயப்படும் கட்டமைப்பிற்கு டளஸ் அலகப்பெரும அதனை முன்னெடுத்தார்.
எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒரு பாராளுமன்றத்திடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது நாட்டுக்கு உகந்த, இளைஞர்களுக்கு பொறுத்தமான, சர்வதேச சமூகத்துடன் இணக்கமான வகையில் அதனை முன்னெடுக்கக் கூடிய கலந்துரையாடல் மற்றும் கொள்கைத் திட்டம் ஆகும். 4.64 மில்லியன், இல்லையெனில் இலங்கையின் சனத்தொகையில் சுமார் 23.2% ஆக¼ பகுதியாக உள்ள இளைஞர்களைத்தான் நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறீர்கள்.
உங்களுக்கு தனிப்பட்ட அரசியல் கருத்து இருந்தால், தனிப்பட்ட விருப்பம் இருந்தால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, 4.64 மில்லியன் இளைஞர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விருப்பத்தை இந்த சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்ற முடிந்தால், இன்னும் ஓரிரு தசாப்தங்களில் அதன் பலன்களை உங்களால் அனுபவிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
இளைஞர்களின் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் நாட்டின் கல்வியை சீர்திருத்துவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து, 2048 ஆம் ஆண்டில் தற்போதைய இளைஞர்களுக்கும் எதிர்கால இளைஞர்களுக்கும் இலங்கையை முழுமையான நாடாக மாற்றுவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உழைத்து வருகிறார். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது.இந்த நாட்டிற்கு தொழில்முறை அரசியல்வாதியை இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்க வேண்டும். அதற்கு இப்போதே தயாராக வேண்டும். இன்று விவாதிக்கப்படும் இளைஞர் பாராளுமன்ற சட்டத்தை முறையாக தயாரிப்பதற்கு உங்கள் ஆதரவு அவசியம் என்றார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன,
பல்வேறு ஆட்சிகளின் கீழ், பல்வேறு நபர்களின் தேவைகளுக்கு உட்பட்டு இயங்கி வந்த தேசிய இளைஞர் பாராளுமன்றம் சுதந்திரமான நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. இளைஞர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்குத் தேவையான பின்னணியை வழங்க இந்நாட்டின் வரலாறு தவறிவிட்டது. எனவே இன்று அதற்கான பின்னணி உருவாக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து பேசப்படுகிறது. தங்களுக்குத் தேவையான சட்டமூலத்தை தாங்களே தயாரிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதுதான் நாம் செய்யும் தவறாகும். எனவேதான் இந்த உத்தேச இளைஞர் பாராளுமன்றச் சட்டத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என நான் தீர்மானித்துள்ளேன்.
இளைஞர்கள் அல்லாத ஒரு குழு இளைஞர்களுக்குத் தேவையானதென்று கருதும் விடயங்களை தீர்மானித்து செயல்படுத்த இடமளித்தது தான் வரலாற்றில் நாம் செய்த தவறாகும். அதனால், இளைஞர்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. வரலாறு மீண்டும் தவறிழைப்பதை அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப உங்கள் பங்களிப்பை கண்டிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று, அடுத்த பாராளுமன்றத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட சட்ட கட்டமைப்பின் கீழ் சுயாதீனமாக செயல்படக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக அதை உருவாக்கும் வரலாற்று முக்கியமான செயல்முறைக்கு பங்களிக்கும் நபர்களாக நீங்கள் மாறுவீர்கள். இந்த நாட்டின் தேசிய பாராளுமன்றத்திற்கு திறமையான தலைவர்களை உருவாக்கும் முதன்மையான இடமாக இந்த இளைஞர் பாராளுமன்றம் மாற வேண்டும்.
ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதமர் பெதும் ரணசிங்க,
கடந்த 113 வருடங்களாக நாம் கடைப்பிடித்து வரும் பாராளுமன்ற ஜனநாயகம் இலங்கையின் முன்னேற்றத்துடன் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனது அவதானிப்பின்படி, இந்த முறைமையின் மூலம் நமது முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் தேவையான வழிகாட்டுதல் மற்றும் பலம் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அப்படியானால், நமக்கு மிகவும் பொருத்தமான ஒரு முறையைத் தயாரிப்பதே நமது தற்போதைய பொறுப்பு. நமது சிந்தனைக்கும், நமது பாரம்பரியத்திற்கும், மக்களின் மனதிற்கும் பொருந்தக்கூடிய ஒரு ஆட்சி மரபை இந்த ஜனநாயகத்திற்கு ஏற்ப உருவாக்க வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. தேசிய இளைஞர் பாராளுமன்றத்திற்கு அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் பரந்த பணியைச் செய்யும் திறனும் சாத்தியமும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தேசிய இளைஞர் பாராளுமன்றம் தேசிய கொள்கைகளை வகுப்பதில் பரந்த பங்களிப்பை வழங்கும் வகையில் தேசிய இளைஞர் பாராளுமன்ற சட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் நிபுனி ஷெஹேனி அபேதிர, எதிர்க்கட்சித் தலைவர் சிதிஜா மிஹிரங்க மற்றும் ஏனைய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.