“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் “அஸ்வெசும” பலன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என்ற வகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காக 02 மில்லியன் பேரின் பெயர் பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
- பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்டில் மீண்டும் வாய்ப்பு – எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை சமர்பிக்க ஜூலை 10 வரையில் கால அவகாசம்.
பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் மூவர் அடங்கிய தெரிவுக்குழுக்களின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட பின்பே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்கின்ற போதிலும், தற்போது பிரசித்தப்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது மேன்முறையீடுகளை ஜூலை 10 வரையில் சமர்பிக்கலாம்.
அதேபோல் சமூக நலன்புரித் திட்டங்களுக்கு தகுதியற்றவர்களின் விவரம் அடங்கிய பட்டியலில் பெயரிடப்பட்டிருப்போர் தமது எதிர்ப்புக்களையும் முறைப்பாடுகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு வெளியிடுவதற்கான கடிதத்தை பிரதேச செயலகத்தில் கையளிக்க முடியும். அது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தை எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலும் தகுதியானவர்கள் எவரையும் கைவிடாத வகையிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் நியதிகளுக்கமைய செயற்படுமாறு பிரதேச செயலளார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் பொது மக்களுக்கான கொடுப்பனவு திட்டங்களான முதியோர் கொடுப்பனவு 456,806 பேருக்கும், சிறுநீரக நோயாளர்கள் 19,496 பேருக்கும் , அங்கவீனமானவர்கள் 46,857 பேரும் உள்ளடங்களாக 523,159 பேருக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கான பெயர் விவரங்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
“அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டதில் பதிவு செய்துக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் இணைந்துகொள்ள விரும்புவோருக்கு வருடாந்தம் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.