இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க நியமனம் அண்மையில் (05) தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் (H.E. (Ms.) Ho Thi Thanh Truc) இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா, எம். உதயகுமார் மற்றும் காமினி வாலெபொட ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவக்கு பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான ஆழமாக வேரூன்றிய வரலாற்று உறவு பௌத்த மதத்திலிருந்தும் காலனித்துவ காலத்தில் வியட்நாம் போராட்டத்தின் போது இலங்கை வெளிப்படுத்திய ஒருமைப்பாட்டிலிருந்தும் ஏற்பட்டது என இதன்போது உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை நிறுவுவது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை புதுப்பிக்கப்பட்ட கடப்பாடுகளுடன் வலுப்படுத்தும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக், பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த பாரம்பரிய உறவுகளையும் பலதரப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வழங்கிய வலுவான ஆதரவுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் பாராளுமன்ற ஒத்துழைப்புக்கான பாலமாக செயல்படும் எனவும் வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், தொழிநுட்ப மேம்பாடு, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவித்த நாடாக வியட்நாமுடன் நட்புறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை வழங்கும் எனத் தெரிவித்தார்.