இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நிரோஷன் பெரேரா நியமனம்

இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிரோஷன் பெரேரா (ஜூலை 19) தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபல்டன் (Michael Appleton) இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.   

நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, கௌரவ வேலு குமார் மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இசுறு தொடங்கொட உதவிச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரகுமான்  பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.  

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில் இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உருவாக்கம், இரு நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை மேலும் விருத்தி செய்வதை குறித்துக்காட்டுகின்றது எனத் தெரிவித்தார். அத்துடன், பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் பட்டப்பின்படிப்புப் பாடநெறிகளுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புகளை நியூசிலாந்து வழங்கியுள்ளதுடன், பல இலங்கையர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்துவதற்கு நட்புறவுச் சங்கம் சிறந்த தளமாக இருக்கும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நியூஸிலாந்தின் இலங்கைக்கான முதலாவது வதிவிட உயர்ஸ்தானிகர் மைக்கல் அபல்டன், நட்புறவுச் சங்கத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பதில் புதிதாக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய நட்புறவுச்சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிரோஷன் பெரேரா, நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உட்பட நெருக்கடியான காலங்களில் நியூசிலாந்து அரசாங்கத்தின் உதவிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, ஜூலை 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நியூசிலாந்து ஆய்வு விஜயத்தை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மற்றும் நியூசிலாந்து அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன